Published : 18 Oct 2016 04:13 PM
Last Updated : 18 Oct 2016 04:13 PM
ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடத்திய எழுத்துபூர்வ தேர்வுக்கான வினாக்களில் பல விசித்திரமாக இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.
கிரிக்கெட்டுக்குத் தொடர்பில்லாத கேள்விகளினால் தேர்வு எழுத வந்தவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்ததாக செய்தி வெளியாகியுள்ளன.
விசித்திரக் கேள்விகளில் சில...
ராமர் கடவுளின் ஒரே சகோதரியின் பெயர் என்ன?
கிரேக்கத்தின் அதீனா மற்றும் ரோமனின் மினர்வா ஆகிய கடவுளுக்கு இணையான இந்திய பெண் தெய்வம் யார்?
“ஏதாவது ஒன்று உறுதியானது என்றால், அது, நானே கூட மார்க்சிஸ்ட் அல்ல என்பதுதான்” என்று கூறியது யார்?
இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்சை நிறுவிய இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
இப்படிப்பட்ட கேள்விகளினால் குழப்பமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.
45 நிமிட தேர்வை சுமார் 941 பேர் எழுதியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு மேற்கூறிய கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.
தேர்வு எழுதிய 941 பேரில் 300 பேர் மதிப்பெண் எதையும் எடுக்க முடியவில்லை. ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் தவறான விடைகளுக்கு மதிப்பெண்ணை கழிக்கும் முறை கிடையாது. மேலும் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம் பாஸ் மார்க் எது என்பதையும் நிர்ணயிக்கவில்லை.
200 பேர் 2 அல்லது 3 சரியான விடைகளை எழுதியதாகவும் அதிகபட்ச மதிப்பெண்களே 17தான் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்வுக்கான பாடத்திட்டத்தில் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு கிரிக்கெட் குறித்து 20 கேள்விகள். பிற விளையாட்டுகளைப் பொறுத்தவரை உள்நாட்டு, வெளிநாட்டு விளையாட்டு குறித்த கேள்விகள் முறையே 5 ஆகும். மீதி கேள்விகள் பொது அறிவு மற்றும் பிற விஷயங்கள் பற்றியது.
இந்த விசித்திர கேள்விகள் பற்றி ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்திடம் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, “கேள்விகள் கடினமானவை அல்ல. தினசரி செய்தித்தாள்களை படித்து வந்தாலே இவற்றுக்கான பதிலை எழுதிவிடலாம்” என்று கூறிய அவரே மேற்கூறிய 4 கேள்விகளுக்குமான விடையை கூறினார்.
ராமரின் ஒரே சகோதரி பெயர் ஷாந்தா, கிரேக்கத்தின் அதீனாவுக்கு இணையானது இந்தியாவின் சரஸ்வதி, 3-வது கேள்விக்கு விடை காரல் மார்க்ஸ், இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸை நிறுவியவர் லார்ட் இர்வின் (1926) என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT