Published : 05 Oct 2016 08:30 PM
Last Updated : 05 Oct 2016 08:30 PM
டெஸ்ட் போட்டியை நேரில் காணும் ரசிகர்களின் ஆர்வம் குறைந்து வரும் நிலையில் அவர்களை மகிழ்விக்க சிறந்த ஆட்டத்தை நிச்சயம் வழங்க வேண்டும் என இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
நியூஸிலாந்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட்டில் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது.
நியூஸிலாந்து தொடரை தொடர்ந்து இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளும் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாட உள்ளன. இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் நிலையில் இந்திய அணி வீரர்கள் சிறந்த ஆட்டத்தை கொடுக்க வேண்டும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: டெஸ்ட் போட்டிகளின் போது ரசிர்களுடன் வீரர்கள் கலந்துரையாட வேண்டும். அப்போது குறுகிய வடிவிலான போட்டியின் போது கிடைக்கும் உத்வேகம், ஆற்றல் கிடைக்கும். ரசிகர்கள் உற்சாகமான ஆட்டத்தை காண விரும்புகிறார்கள். நாம் அதை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
நாம் அவர்களுடன் உரையாடும் போது அவர்களும் ஆட்டத்தின் ஒருபகுதியாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய முடியும். அவர்களது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருநாள் போட்டிகளில் இது நடைபெறும்போது, ஏன் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் முடியவில்லை?. அதற்குரிய வழியை தேட வேண்டும்.
இவ்வாறு விராட் கோலி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT