Published : 12 Oct 2016 04:47 PM
Last Updated : 12 Oct 2016 04:47 PM
உலகக்கோப்பை கால்பந்து தென் அமெரிக்கப் பிரிவு தகுதிச் சுற்று போட்டிகளில் பிரேசில் தொடர்ச்சியாக தனது 4-வது வெற்றியைப் பதிவு செய்து முன்னிலை வகிக்க மற்றொரு பெரிய அணியான அர்ஜென்டினா பராகுவே அணிக்கு எதிராக சொந்த மண்ணில் அதிர்ச்சித் தோல்வி கண்டு 5-வது இடத்தில் உள்ளது.
பராகுவே அணிக்கு எதிராக 1-0 என்று காயமடைந்த மெஸ்ஸி இல்லாத அர்ஜென்டின அணி தங்கள் நாட்டிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்ததையடுத்து ரஷ்யாவில் 2018-ல் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெறாமல் பிளே ஆஃப் சுற்றுகளை நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் வெனிசூலாவுக்கு எதிராக நட்சத்திர வீரர் நெய்மர் இல்லாத பிரேசில் 2-0 என்று வெற்றி பெற்று முதலிடம் பெற்றுள்ளது, பிரேசில், அர்ஜெண்டின அணிகள் அடுத்த போட்டியில் மோதவுள்ளன.
பிரேசில்:
நெய்மரின் இன்மையை மறக்க பிரேசில் அணிக்கு 7 நிமிடங்களே தேவைப்பட்டது, அதாவது முதல் கோலை கப்ரியேல் ஜீசஸ் அடித்தார், இவர் தனது 4வது சர்வதேச போட்டியில் 4-வது கோலை அடித்தார். கோல் கீப்பர் டேனியல் ஹெர்னாண்டஸ் தலைக்கு மேல் அருமையான ‘லாப்’ அது.
55-வது நிமிடத்தில் நெய்மருக்குப் பதில் ஆடும் வில்லியன் நடுக்கள வீரர் ரெனாட்டோ அகஸ்டோ அடித்த கிராஸை கோலாக மாற்றினார். இந்த ஆட்டம் விளக்குகள் சரியாக எரியாததால் சுமார் 65 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அர்ஜென்டினா:
அர்ஜென்டினா 5-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதனால் பிளே ஆஃப் சுற்றுகளை எதிர்நோக்குகிறது, இயல்பாகவே உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற முடியாத சிக்கல் எழுந்துள்ளது. இரண்டு ஏமாற்றமான டிராவுக்குப் பிறகு கடினமாக ஆடிய பராகுவே அணியிடம் 1-0 என்று தோல்வி தழுவி மேலும் மோசமானது. 17-வது நிமிடத்தில் டெர்லிஸ் கொன்சாலேஸ் கோலை அடித்தார். இரண்டாவது பாதியில் அர்ஜெண்டினா அணி சமன் செய்ய கிடைத்த பெனால்டி ஷாட்டை செர்ஜியோ அகிரோ அடிக்க அது தடுக்கப்பட்டது.
அர்ஜெண்டின அணியின் சிறப்பான தடுப்பாட்ட வீரர்களான சபலேட்டா, நிகலஸ் ஆட்டாமெண்டி, ரமீரோ பியூனெஸ் மோரி ஆகியோர் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தியது.
நவம்பரில் பிரேசில் மற்றும் கொலம்பியாவுக்கு எதிராக 2 சவாலான போட்டிகளை அர்ஜெண்டினா விளையாடவுள்ளது. இந்த இருபோட்டிகளுக்கும் ‘லயன்’ லயோனல் மெஸ்ஸி திரும்புவார் என்று பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT