Published : 05 Jun 2014 10:00 AM
Last Updated : 05 Jun 2014 10:00 AM
ஸ்வீடனில் 1958-ல் நடைபெற்ற 6-வது உலகக் கோப்பை போட்டியில்தான் கால்பந்து ஜாம்பவானான பிரேசிலின் பீலே முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கினார்.
இறுதி ஆட்டத்தில் பீலே அடித்த இரு கோல்கள் உதவியுடன் பிரேசில் முதல்முறையாக உலக சாம்பியன் ஆனது. இந்த உலகக் கோப்பை போட்டியை முதல்முறையாக ஸ்வீடன் நடத்தியது. முதல்முறையாக சர்வதேச அளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உலகக் கோப்பை கால்பந்து போட்டியும் இதுதான்.
பங்கேற்ற 16 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. பிரேசில் அணியில் 17 வயதான பீலே இடம் பெற்றிருந்தார். எனினும் தொடக்கத்தில் அவர் களமிறக்கப்படவில்லை. பிரேசில் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோல்கள் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. உலகக் கோப்பை போட்டியில் கோல் அடிக்கப்படாமல் டிராவில் முடிந்த முதல் போட்டி இதுதான்.
இதையடுத்து பிரேசில் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால் பீலேவுக்கு களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீலே கோல் அடித்தார். உலகக் கோப்பை போட்டியில் அவர் அடித்த முதல் கோல் அது. மேலும் அந்த ஒரு கோல் மட்டுமே அப்போட்டியில் அடிக்கப்பட்டதால், அதுவே வெற்றிக்கான கோலாகவும் அமைந்தது.
போட்டியை நடத்திய நாடான ஸ்வீடன், மேற்கு ஜெர்மனி, பிரேசில், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக நடைபெற்றன.
மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி ஸ்வீடன் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் பிரான்ஸ் – பிரேசில் அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய பிரேசில் 5-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை அபாரமா வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. பீலே ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார்.
பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் பேராதரவுடன் களமிறங்கிய ஸ்வீடன் ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற்றது. பிரேசில் அணியின் வாவா 9 மற்றும் 30-வது நிமிடங்களில் கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுத் தந்தார். இதன் பிறகு ஆட்டத்தில் பீலேவின் ஆதிக்கம் தொடங்கியது. 55 மற்றும் 89-வது நிமிடங்களில் அவர் கோல் அடித்தார். இறுதியில் 5-2 என்ற கணக்கில் பிரேசில் வென்று உலகக் கோப்பையை முதல்முறையாக கைப்பற்றியது.
பிரேசில் அணிக்காக கடைசி நான்கு போட்டிகளில் மட்டும் விளையாடிய பீலே 6 கோல் அடித்தார். இதில் இரு கோல்கள் இறுதி ஆட்டத்தில் அடிக்கப்பட்டன. இந்த உலகக் கோப்பையில் பிரேசில் அணி 16 கோல்களைப் போட்டது. அந்த அணிக்கு எதிராக வெறும் 4 கோல்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.
உங்களுக்கு தெரியுமா?
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி இதுவரை அதிகபட்சமாக 7 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. இதில் 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு அடுத்தபடியாக இத்தாலி 6 முறை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்று, அதில் 4 முறை சாம்பியன் ஆகியுள்ளது. நடப்பு சாம்பியனான ஸ்பெயின் 2010-ம் ஆண்டுதான் முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. அப்போது உலகக் கோப்பையையும் வென்றது.
1958 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 35
மொத்த கோல்கள் - 126
ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 3.60
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 8,68,000
டாப் ஸ்கோர்
ஜஸ்ட் பான்டெய்ன் (பிரான்ஸ்) - 13 கோல்கள்
பீலே (பிரேசில்) - 6 கோல்கள்
ஹெல்முட் ரான் (மேற்கு ஜெர்மனி) - 6 கோல்கள்
பீட்டர் மெக்பார்லெண்ட் (வடக்கு அயர்லாந்து) - 5 கோல்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT