Published : 21 Oct 2016 09:12 PM
Last Updated : 21 Oct 2016 09:12 PM
அபுதாபியில் தொடங்கிய மே.இ.தீவுகள்-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது.
யூனிஸ் கான் 127 ரன்கள் எடுத்து தனது 33-வது டெஸ்ட் சதத்தை சாதித்தார். 42/2 என்ற நிலையிலிருந்து ஆசாத் ஷபிக்(68), யூனிஸ் கான் (127), மற்றும் மிஸ்பா உல் ஹக் (90 நாட் அவுட்) ஆகியோர் பாகிஸ்தானை தூக்கி நிறுத்தினர்.
ஆசாத் ஷபிக், யூனிஸ் கான் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 87 ரன்களைச் சேர்த்தனர். மிஸ்பா-யூனிஸ் கான் ஜோடி 4-வது விக்கெட்டுக்காக 175 ரன்களைச் சேர்த்தனர்.
யூனிஸ் கான் தனது 33-வது சதத்தை எடுத்து மேலும் 27 ரன்களைச் சேர்த்து 10 பவுண்டரி 1 சிக்சருடன் 127 ரன்கள் எடுத்து பகுதி நேர பவுலர் பிராத்வெய்ட் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்து டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மிஸ்பா உல் ஹக் இந்த மைதானத்தில் ஏற்கெனவே 5 சதங்களை அடித்து 99.77 என்று இந்த மைதானத்தில் சராசரி வைத்துள்ளார். அவர் தனது 6-வது சதத்தை நாளை எட்டுவார் என்று எதிர்பார்க்கலாம், மந்தமான முதல் நாள் பிட்சில் அதை விட மந்தமான மே.இ.தீவுகள் பந்து வீச்சில் பாகிஸ்தான் என்ன செய்ய முடியுமோ அதையே செய்துள்ளது. 83 ரன்களில் யூனிஸ் கான் இருந்த போது பிராத்வெய்ட் பந்தை மேலேறி வந்து ஆட முயன்று அவரிடமே அடித்தார், அது ஒரு கேட்ச் வாய்ப்பு முழங்கால் உயரம் வந்த கேட்சை தவற விட்டார் அவர்.
மிஸ்பா உல் ஹக் 54 ரன்களில் இருந்த போது கேப்ரியல் ஒரு வாய்ப்பை கோட்டை விட்டார். பிஷூ 20 ஓவர்கள் வீசி 92 ரன்கள் கொடுத்து தொடக்க வீரர் சமி அஸ்லம் விக்கெட்டை வீழ்த்தினார். கேப்ரியல் 14 ஓவர்களில் 1 மெய்டன் 43 ரன்கள் 2 விக்கெட். இது 3ஆகி இருந்திருக்க வேண்டும், கேட்சை விட்டார், ஆனால் மே.இ.தீவுகளில் உண்மையாக வீசியவர் கேப்ரியல் என்றால் மிகையாகாது. ஜேசன் ஹோல்டர் டைட்டாக வீசினார், படுமோசமான கேப்டன்சி ஹோல்டருடையது, விக்கெட் வீழ்த்தும் உத்திகளே அவரிடம் இல்லை. எளிதான களவியூகம், சிங்கிள்கள் தன் இஷ்டத்துக்கு எடுக்கப் பட்டன.
304 ரன்களில் 22 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என்றால் 112 ரன்கள்தான் பவுண்டரிகளில் வந்துள்ளது மீதி ரன்கள் ஓடி எடுக்கப்பட்டவைதான், இந்த அளவுக்கு களவியூக லட்சணம் இருந்துள்ளது. பாகிஸ்தானுக்கு இன்னொரு எளிதான போட்டியாக இருக்கும் இது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT