Published : 26 Jun 2014 03:56 PM
Last Updated : 26 Jun 2014 03:56 PM
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடரில் இதுவரை மெஸ்ஸி, நெய்மார் இருவரும் தலா 4 கோல்கள் அடித்து முதலிடம் வகிக்கின்றனர்.
நைஜீரியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் அர்ஜென்டீனா 3-2 என்று வெற்றி பெற்றது. இதில் மெஸ்ஸி 2 கோல்களை அடித்தார். இதன் மூலம் இவரும் 4 கோல்கள் அடித்து நெய்மாருடன் இணைந்துள்ளார்.
அர்ஜென்டீனா, நைஜீரியா ஆகிய இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.
நைஜீரியாவின் அஹமட் மூசா இந்த ஆட்டத்தில் மெஸ்ஸிக்கு இணையாக விளையாடி 2 கோல்களை அடித்தார்.
மெஸ்ஸி, நெய்மார் ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு அடுத்தபடியாக ஜெர்மனியின் தாமஸ் முல்லர் 3 கோல்கள் அடித்துள்ளார். மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஷெர்தான் ஷகீரி ஹேட்ரிக் கோல்கள் அடித்துப் பட்டியலில் இணைந்துள்ளார்.
நைஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி மீது ரசிகர்கள் பேரார்வம் கொண்டு எழுச்சியுடன் காணப்பட, அவரை பயிற்சியாளர் சாபெல்லா அரை மணி நேரம் முன்னதாக ஓய்வறைக்கு அழைத்து மாற்று வீரரைக் களமிறக்கினார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சேர்த்து அர்ஜென் டீனாவுக்கு அமோக ஆதரவு அளித்துப் பாட்டுப் பாடி மகிழ்ச்சியில் இருந்தனர். அதனுடன் அவர்கள், "கோப்பையை எங்களுக்கு மெஸ்ஸி கொண்டு வருவார்” என்று பாட்டுப்பாடி ஆரவாரம் செய்து கொண்டிருந்த போது மெஸ்ஸியை வெளியே அழைத்தது பெரும் ஏமாற்றத்தையே அவர்களுக்கு அளித்திருக்கும்.
பிரேசில் ரசிகர்கள் தங்கள் பங்கிற்கு பிரேசில் சாம்பியன் என்று பதிலடி கொடுத்தனர். ஆகவே இந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பிரேசில், அர்ஜென்டீனா அணிகள் இறுதியில் மோதும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் நெதர்லாந்து, ஜெர்மனி பயங்கரமாக இருந்து வருகிறது. டார்க் ஹார்சஸ் என்று அழைக்கப்படும் அதிர்ச்சியூட்டும் அணிகளாக உருகுவே, மெக்சிகோ, கோஸ்டா ரிகா, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற அணிகளும் உள்ளன.
நைஜீரியாவுக்கு எதிராக 3வது நிமிடத்திலேயே மெஸ்ஸி நிரூபித்தார். ஆனால் அதற்குக் காரணம், மாஸ்செரானோ இடது புறம் அபாரமான பாஸ் ஒன்றை டி மரியாவுக்கு அளிக்க மரியா அடிக்க நைஜீரியாவின் கோல் கீப்பர் என்யீமா கை விரல் நுனியில் பட்டு போஸ்டில் பட்டுத் திரும்பி களத்திற்குள் வந்தது. ஆனால் சமயோசிதமாக அந்தப் பந்தை மெஸ்ஸி விரைவில் வந்து கோலாக மாற்றினார்.
சரியாக ஒரு நிமிடம் 20 வினாடிகள் கழித்து தந்திரமான வீரரான மூசா, இடது புறம் ஒரு பந்தை வேகமாக எடுத்து வந்து அர்ஜென் டீனா கோல் எல்லைக்குள் புகுந்தார். தடுப்பணையைக் கடந்து வந்து கோலின் வலது மூலைக்கு ஒரு ஷாட்டை அடித்து அபாரமான சமன் செய்தார். இதுவும் இந்த உலகக் கோப்பையின் அரிய கோல்களில் ஒன்று. இந்த அபாரமான கோல் மூலம் அவர் மெஸ்ஸியால் மட்டும்தான் முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் மட்டும் 2 கோல்களை அர்ஜென்டீனா அடித்திருக்கும், முதலில் டி மரியா ஒரு ஷாட்டைத் தொலைவிலிருந்து அடித்தாலும் துல்லியமாக அடித்தார் ஆனால் நைஜீரிய கோல் கீப்பரும் விழிப்புடன் இருந்தார். இதே நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸி 3, 4 வீரர்களை இரண்டாகப் பிளந்து கொண்டு வந்து பந்தை இடது புறம் உள்புறமாக ஷாட்டை அடிக்க ஹிகுவே அதனை கோலாக மாற்ற முயற்சித்தார் ஆனால் முடியவில்லை.
பிறகு இடைவேளை தருணத்தில் வலதுபுறத்தில் நைஜீரியாவின் 3 வீரர்களின் கண்ணில் மண்ணைத் தூவி மெஸ்ஸி பந்தை எடுத்து வந்தார் ஆனால் அங்கேயே ஃபவுல் செய்யபட ஃப்ரீ கிக் கிடைத்தது.
இந்த ஃப்ரீ கிக் கோலுக்காகத்தான் அனைவரும் காத்திருந்தனர். நைஜீரிய வீரர்கள் சுவர் எழுப்பப்பட்டது. ஆனால் ஃப்ரீகிக்கை அடிப்பது மெஸ்ஸியாயிற்றே! அடித்தார் பந்து நேராக கோலுக்குள் சென்றதை அனைவரும் வேடிக்கைப் பார்க்கவே முடிந்தது. அபாரமான கோலாகும் இது.
மெஸ்ஸி கோல் அடித்ததுதான் தாமதம் இடைவேளை முடிந்தவுடன் 47வது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸியால் மட்டும்தான் முடியுமா என்று நைஜீரிய வீரர் மூசா அர்ஜென் டீனா சற்று அலட்சியமாக இருந்த நேரத்தில் பந்தை இடது புறம் அற்புதமாக எடுத்துச் சென்று கோல் கீப்பர் ரொமிரோவைத் தாண்டி கோலாக மாற்றினார். மெஸ்ஸி 2, மூசா 2.
பிறகு 50வது நிமிடத்தில் அர்ஜென் டீனா வீரர் மார்கஸ் ரோஜோ தலையால் ஒரு கோலை அடிக்க அர்ஜென் டீனாவின் வெற்றி கோலாக அது அமைந்தது.
நைஜீரியா கொடுத்த சவால், அன்று ஈரானிடம் கோல் அடிக்கத் திணறியது ஆகியவற்றினால் அர்ஜென்டீனா அணி இறுதி 16 சுற்றில் மெஸ்ஸியின் அபாரத் திறமையை மட்டுமே நம்பியிருக்கிறது. அர்ஜென்டீன தடுப்பாட்டம் தரமானதாக இல்லை என்று கால்பந்தாட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT