Published : 27 Aug 2022 04:33 PM
Last Updated : 27 Aug 2022 04:33 PM
''நான் மனதளவில் பலவீனமானவனாக உணர்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ள வெட்கப்படவில்லை'' என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக விராட் கோலி சதமடிக்காமல் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், அண்மைக் காலமாக ரன்களை அடிக்கவே அவர் சிரமபப்படுகிறார். ஐபிஎல் 15-ஆவது சீசனில் மூன்று முறை கோலி கோல்டன் டக் அவுட் ஆனார். கடந்த 2019-ம் ஆண்டு ஈடன் கார்டனில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த பிங்க் பந்து டெஸ்டில் கோலி சதம் அடித்தார். அதன் பிறகு 3 ஆண்டுகளாக அவரிடம் சதம் எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இங்கிலாந்து எதிராக அவர் விளையாடிய கடைசி 5 போடகளில் கோலி அரை சதம் கூட அடிக்காமல் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் தொடர், ஜிம்பாப்வே தொடரில் கோலி பங்கேற்கவில்லை.
இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நடந்த 'விராட் ஹார்ட் டூ ஹார்ட்' நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, ''நான் மனதளவில் பலவீனமானவனாக உணர்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ள வெட்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக, நான் ஒரு மாதமாக எனது பேட்டை தொடவில்லை. சமீபத்தில் எனது பலத்தை போலியாக மாற்ற முயற்சிக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இல்லை, உன்னிடம் பலம் இருக்கிறது என்று என்னை நானே என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால் இயக்கத்தை நிறுத்தும்படி என்னுடைய உடல் கூறியது. ஓய்வெடுத்து இச்சூழலில் இருந்து வெளியே வா என என்னுடைய மூளை சொன்னது.
இது மிகவும் சாதாரணமாக உணரக்கூடிய விஷயம்தான். ஆனால், நாம் இதனை பொதுவெளியில் சொல்ல தயக்கப்படுகிறோம். மனரீதியாக பலவீனப்பட்டு இருப்பதை பார்க்க நாம் ஒருபோதும் விரும்புவதில்லை. பலவீனமாக இருப்பதை ஒப்புக்கொள்வதை விட 'வலிமையானவர்' என்று போலியாகக் காட்டிக்கொள்வது மிகவும் மோசமானது.நான் மனதளவில் மிகவும் வலிமையான ஒருவனாக பார்க்கப்படுகிறேன். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒரு வரம்பு உண்டு. அந்த வரம்பை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு ஆரோக்கியமற்றதாகிவிடும்.
களத்தில் எப்போதும் எப்படி சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் என பலர் கேட்டிருக்கிறார்கள். நான் கிரிக்கெட்டை காதலிக்கிறேன். விளையாட முழு ஆர்வத்துடன் இருக்கிறேன். களத்தில் இருக்கும்போது ஒவ்வொரு நொடியிலும் அணிக்காக எதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறேன். இதனால்தான், சுறுசுறுப்பாக இருக்கிறேன் என அவர்களிடம் கூறியிருக்கிறேன்.
எனது அணியை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய விரும்புகிறேன். அப்படியான சிறப்பான விளையாட்டை மேற்கொள்வதற்கான தயாரிப்பில் ஈடுபடுகிறேன். ஆனால், அதற்கான தீவிரத்தை என்னால் இயற்கையாக கொண்டுவர முடியவில்லை. என்னை உந்தி தள்ள வேண்டியிருக்கிறது'' என்றார்.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை விளையாட உள்ளன. இதில், விளையாடும் இந்திய வீரர் விராட் கோலி தனது 100-வது டி20 கிரிக்கெட் போட்டியை விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT