Published : 13 Oct 2016 11:15 AM
Last Updated : 13 Oct 2016 11:15 AM

இங்கிலாந்து வீரர்களை அவமதித்த வங்கதேசம் ஒருநாள் தொடரை இழந்தது!

சிட்டகாங்கில் நேற்று நடைபெற்ற 3-வதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வங்கதேசம் நிர்ணயித்த 278 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்திய இங்கிலாந்து ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து தோற்றபோது ஒவ்வொரு இங்கிலாந்து வீரர் அவுட் ஆகும் போதும் அநாகரிகமாக வங்கதேசம் நடந்து கொண்டது சர்ச்சைக்குள்ளாக, குறிப்பாக ஜோஸ் பட்லரை இழிதகை செய்ததற்கான பலனை 3-வது ஒருநாள் போட்டியில் தோல்வியின் மூலம் வங்கதேசம் அடைந்தது.

முதலில் பேட் செய்த வங்கதேசம் 6 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களை எடுக்க தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அதே 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்து வங்கதேசத்தின் தொடர் உள்நாட்டு ஒருநாள் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதாவது 2014-க்குப் பிறகு இப்போதுதான் தங்கள் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழக்கிறது வங்கதேசம்.

இலக்கைத் துரத்தும் போது உறுதியான ஒரு குறிக்கோளுடன் ஆடிய இங்கிலாந்து வீரர்களில் பில்லிங்ஸ் 62 ரன்களையும் டக்கெட் 63 ரன்களையும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணியில் அடில் ரஷீத் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வங்கதேசத்தை மட்டுப்படுத்த உதவினார்.

டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் வங்கதேசத்தை முதலில் பேட் செய்ய அழைத்தார். ஆனால் இங்கிலாந்து தொடக்கப் பந்து வீச்சு சிறப்பாக இல்லை, வேகமே இல்லாமல் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீச அதனை தமிம் இக்பாலும், இம்ருல் கயேசும் பயன்படுத்திக் கொண்டனர். இதனால் முதல் விக்கெட்டுக்காக 80 ரன்கள் சேர்க்கப்பட்டது, இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேசத்தின் அதிகபட்ச முதல் விக்கெட் ரன் சேர்ப்பாகும். பென் ஸ்டோக்ஸ் (1/24) முதல் விக்கெட்டைத் தூக்கினார்.

46 ரன்களை எடுத்த இம்ருல் கயேஸ் சாதாரண பந்தை ஸ்கொயர் லெக்கில் பதிலி வீரர் லியாம் டாசனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களைக் கடந்த தமிம் இக்பால் 45 ரன்கள் எடுத்து அடில் ரஷீத்தின் கூக்ளியை கவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மஹமுதுல்லாவுக்கு அடில் ரஷீத் 3 அருமையான லெக்ஸ்பின் பந்துகளை வீசி ஒரு மட்டரகமான ஷார்ட் பிட்சை வீச லாங் ஆனில் முறையாக சிக்ஸ் அடிக்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு பந்தில் ஷார்ட் எக்ஸ்ட்ரா கவரில் ஜானி பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து மஹமுதுல்லா அவுட் ஆனார்.

முஷ்பிகு ரஹிம், சபீர் ரஹ்மான் (49), ஆகியோர் 54 ரன்கள் கூட்டணி அமைத்தனர். ஆனால் அடில் ரஷித் வீசிய அருமையான லெக் ஸ்பின்னருக்கு எட்ஜ் செய்து வெளியேறினார் சபீர் ரஹ்மான். ஷாகிப் அல் ஹசன் 4 ரன்களில் மொயின் அலியிடம் ஸ்டம்ப்டு ஆனார். பட்லரின் கிளவ்வில் பட்ட பந்து பைல்களில் பட்டு அகற்றியது. அடில் ரஷீத் தனது 4-வது விக்கெட்டாக நசீர் ஹுசைனை (4) வீழ்த்தினார்.

முஷ்பிகுர் ரஹிம் (67), மொசாடெக் ஹுசைன் (38) ஆகியோர் இணைந்து கடைசி 12 ஓவர்களில் 85 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்க்க ஸ்கோர் 277 ரன்களை எட்டியது, ஸ்பின் பிட்சில் இது மிக நல்ல ஸ்கோர். முஷ்பிகுர் 46 ரன்களில் இருந்த போது ஸ்டோக்ஸ் கேட்சை விட அடுத்த பந்து சிகிஸிற்குப் பறந்து ரஹீம் தனது அரைசதத்தை எட்டினார். கடந்த 21 சர்வதேச இன்னிங்ஸ்களில் முஷ்பிகுர் எடுக்கும் முதல் சதமாகும் இது.

இங்கிலாந்தின் உறுதியான விரட்டல்:

ஜேசன் ராய் காயம் காரணமாக ஆடாததால், ஜேம்ஸ் வின்ஸ், பில்லிங்ஸ் களமிறங்கினர். பில்லிங்ஸ் ஆன் திசையில் இடைவெளியில் அருமையாக ஆடி ரன்களை அடித்தார். வின்ஸ் 32 ரன்களுக்கு நன்றாக ஆடினார், ஆனால் அவர் நசீர் பந்தை நகர்ந்து ஆட முயன்று கோட்டை விட எல்.பி.ஆனார்.

அதன் பிறகு பென் டக்கெட் இறங்கியவுடன் இவரும் பில்லிங்ஸும் வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். பில்லிங்ஸ் ஸ்பின்னர்களை ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப்பை அருமையாக ஆடினார். டக்கெட் தொடக்கத்தில் ரன்கள் எடுக்க சிரமப்பட்டாலும் பிறகு மிட்விக்கெட்டில் சிக்ஸ் மூலம் உத்வேகம் பெற்றார். பில்லிங்ஸ் தனது அரைசதத்தை எடுத்து, அதாவது 69 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து மொசாடெக் ஹுசைன் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று டாப் எட்ஜில் வெளியேறினார். 30வது ஓவரில் டக்கெட் அரைசதம் கடந்தார்.

ஆனால் ஜானி பேர்ஸ்டோ (15) மோசமான ஷாட்டிற்கு ஷபியுல் இஸ்லாம் பந்துல் பவுல்டு ஆக, டக்கெட் 68 பந்து 63 ரன்களில் முஷ்பிகுர் ரஹிமின் அருமையான லெக் திசை கேட்சிற்கு வெளியேற இங்கிலாந்து 179/4 என்று வங்கதேசத்திற்கு சற்றே நம்பிக்கையை ஏற்படுத்தியது .

இன்னமும் 99 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் பென் ஸ்டோக்ஸுடன் பட்லர் இணைந்தார். இவர்கள் அவசரப்படாமல் உறுதியுடன் ஆடி ஸ்கோரை 227 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், பட்லர் 25 ரன்கள் எடுத்து மோர்டசா பந்தில் பவுல்டு ஆனார். மொயின் அலி 1 ரன் எடுத்து மோர்டசா பந்தை மிட் ஆனில் எளிதான கேட்ச் கொடுக்க இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றிக்கு இன்னமும் 42 ரன்கள் தேவையாக இருந்தது.

இந்நிலையில் வெற்றிக்கு 25 ரன்கள் உள்ள நிலையில் டஸ்கின் அகமதுவை கவரில் ஒரு பெரிய பவுண்டரி விளாசினார் கிறிஸ் வோக்ஸ், அடுத்த பந்து மஷ்ரபே மோர்டசா அருமையான கேப்டனியில் ஸ்லிப்பைக் கொண்டு வந்தார். வோக்ஸ் அடித்த ஷாட்டிற்கு ஸ்லிப்பில் மார்புயர கேட்சை விட்டார் இம்ருல் கயேஸ். ஒருவேளை இந்தக் கேட்சைப் பிடித்திருந்தால் இங்கிலாந்து பிரச்சினைக்குள்ளாகியிருக்கலாம்.

கடைசியில் ஸ்டோக்ஸ் 48 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 47 ரன்கள் எடுத்தும், வோக்ஸ் 18 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 27 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர், இங்கிலாந்து 47.5 ஓவர்களில் 278/6 என்று வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

ஆட்ட நாயகனாக அடில் ரஷீத்தும், தொடர் நாயகனாக பென் ஸ்டோக்ஸும் தேர்வு செய்யப்பட்டனர்.

வங்கதேசம் ஒரு ரன் எடுத்தால் பயங்கர விசில் சத்தம், ஆரவாரம் செய்யும் வங்கதேச ரசிகர்கள் இங்கிலாந்து சிக்ஸ் அடித்தால் கூட முகம் சுவராக மாறி இறுக்கமடையும் ஒரு சூழ்நிலையில் ரசிகர்களின் ஆதரவு என்ற ஒரு முக்கியமான உத்வேகம் வங்கதேசத்திற்கு பயணம் செய்யும் எந்த ஒரு அணிக்கும் கிடைத்ததில்லை எனும்போது இங்கிலாந்து தொடரை வென்றது கவனிக்கத்தக்க சாதனையே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x