Published : 26 Aug 2022 06:40 AM
Last Updated : 26 Aug 2022 06:40 AM
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்டில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. சாரேல் எர்வீ 3 ரன்னில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்க அணி விக்கெட்களை இழந்தது.
கேப்டன் டீன் எல்கர் 12, கீகன் பீட்டர்சன் 21, எய்டன் மார்க்ரம் 14, ராஸி வான் டர் டஸ்ஸன் 16, சைமன் ஹார்மர் 2, கேசவ் மகாராஜ் 0, கைல் வெர்ரின்னே 21 ரன்களில் நடையை கட்டினர். 38 ஓவர்களில் 108 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்த நிலையில் அன்ரிச் நார்ட்ஜுடன் இணைந்து காகிசோ ரபாடா சிறிது போராடினார்.
அன்ரிச் நார்ட்ஜ் 10 ரன்னில் ஆலி ராபின்சன் பந்திலும், ரபாடா 36 ரன்னில் ஜேக் லீச் பந்திலும் வெளியேறே 53.2 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்க அணி. இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3, ஸ்டூவர்ட் பிராடு 3, பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
ஆண்டர்சன் சாதனை…
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் களமிறங்கியதன் மூலம் சொந்த நாட்டில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இந்த வகையில் சச்சின் 94டெஸ்ட் போட்டிகளை இந்தியாவில் விளையாடி 2-வது இடத்தில் உள்ளார். 2003-ம் ஆண்டு டெஸ்டில் அறிமுகமான ஆண்டர்சன் இதுவரை 174போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT