Published : 03 Oct 2016 03:26 PM
Last Updated : 03 Oct 2016 03:26 PM
இந்தியா 500 டெஸ்ட்கள் (‘India 500 Tests,’) என்ற 'தி இந்து' குழுமத்தின் வெளியீட்டு நூல் அறிமுக விழாவில் கலந்து கொண்ட அனில் கும்ப்ளே, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழிவில்லை என்றார்.
இந்திய அணி 500-வது டெஸ்ட் போட்டியை விளையாடி நிறைவு செய்ததன் அடையாளமாக தி இந்து (ஆங்கிலம்) குழுமத்தின் “India 500 tests" என்ற வெளியீடு கொல்கத்தாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த விழாவில் முன்னாள் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர், தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளரும் கலந்து கொண்டு பேசுகையில் “டெஸ்ட் கிரிக்கெட் இறந்து விடும் என்று கூறிக்கொண்டேயிருந்தால் அது ஒருநாள் நடந்தேவிடும். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழிவில்லை, அதன் மரணம் பற்றி பேச வேண்டாம்” என்றார்.
விழாவில் கலந்து கொண்ட லஷ்மண் கூறும்போது, “பிசிசிஐ டெஸ்ட் கிரிக்கெட்டை சிறிய நகரங்களுக்கும் எடுத்துச் சென்று பிரபலப்படுத்த முயல்கிறது. இளம் வீரர்களைக் கேட்டால் டி20யில் ஆட, பார்க்க விருப்பம் என்று கூறுவார்கள் ஏனெனில் அவர்களுக்கு உடனடி முடிவுகள் தேவை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது ஆளுமைகளைப் பார்ப்பதால் அவர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீதும் ஆர்வம் ஏற்படும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு டிஜிட்டல் மார்கெட் உள்ளது.
சேவாக் கூறும்போது, “சிறிய ஊர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துச் செல்வதன் மூலம் பிசிசிஐ அபாரமாகச் செயல்படுகிறது. இதுதான் அடுத்தக் கட்டத்திற்கான செயல்பாடு. பிங்க் பந்து கொண்டு பரிசோதனைகள் செய்ய வேண்டியதில்லை. பின்னால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வரும்போது ஸ்டேடியம் நிரம்பி வழியும் என்று உறுதியாகக் கூறுகிறேன்” என்றார்.
இந்தியா 500 டெஸ்ட்கள் பற்றிய வெளியீட்டை கொண்டு வரும் தி இந்து குழுமத்தைப் பாராட்டி பேசிய பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர், “தி இந்து குழுமம் இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் முதல் 500-வது டெஸ்ட் போட்டி வரை சுவையான தருணங்களை தடம் கண்டு புத்தகம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இது உண்மையில் தகவல் பொக்கிஷம்தான்! மேலும் பிரமிக்கத்தக்க புகைப்படங்களுடன் இது ஒரு புதையல்.
இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் பிசிசிஐ பெருமையடைகிறது” என்றார்.
பிசிசிஐ, லோதா கமிட்டி மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து சேர்மன் என்.ராம் கூறும்போது, “நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தினை நாம் அனைவரும் மதிக்கிறோம். சீர்த்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை அவை வழங்கட்டும். குறிப்பாக பரந்துபட்ட வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கட்டும். ஆனால் கிரிக்கெட் நிர்வாகம் எனும் சூட்சமங்களுக்கேற்ப அதனை நடத்தவும் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளவும் பிசிசிஐ-க்கு தன்னாட்சி அனுமதியளிக்க வேண்டும். இதனால் பல வரவேற்கத் தக்க மாற்றங்களை ஏற்கெனவே அது கொண்டு வந்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பதிலாக திடீரென எந்திரத்திலிருந்து தோன்றிய கடவுள்கள் போல் தேர்வு செய்யப்படாத, பிரதிநிதித்துவம் அற்ற ஒரு குழு கொண்டு வரப்படுவதன் மூலம் யார் நலம் பாதுகாக்கப்படும்? நிச்சயம் இந்திய கிரிக்கெட்டின் நலனோ, வீரர்களின் நலனோ அல்ல” என்றார்.
இந்தப் புத்தகம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் அனைத்து சுவாரசியமான தருணங்களையும் பிடித்து வைத்துள்ளது. தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் அரிதான கிரிக்கெட் புகைப்படங்கள் ஆகியவற்றின் மூலம் தீவிர கிரிக்கெட் ரசிகர்களின் நூலகத்திற்கு வளமையான ஒரு கூடுதல் சிறப்பு சேர்க்கவல்லது.
பிரபல கிரிக்கெட் வல்லுநர்கள் தவிர மாதவ் ஆப்தே, ஜி.ஆர்.விஸ்வநாத், பேடி, கபில்தேவ் சச்சின், சேவாக், விராட் கோலி உள்ளிட்டோரின் கட்டுரைகளும் நினைவுத் தொகுப்புகளும் இந்நூலில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT