Published : 10 Oct 2016 10:55 AM
Last Updated : 10 Oct 2016 10:55 AM
போர்ட் எலிசபத்தில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வென்று தென் ஆப்பிரிக்க அணி ஒயிட் வாஷ் வெற்றிக்கு ஆயத்தமாகி உள்ளது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கைல் அபாட் 4 விக்கெட்டுகளையும் ஷம்ஸி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று தொடரில் 4-0 என்று முன்னிலை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
காற்று பலமாக வீச தொடக்க சூழ்நிலைமைகளைப் பயன்படுத்தி நன்றாக ஸ்விங் செய்தார் கைல் அபாட். இதனால் ஏரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் கைல் அபாட் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினர், பிஞ்சிற்கு அருமையான இன்ஸ்விங்கர், மட்டைக்கும் கால்காப்பிற்கும் இடையே புகுந்து ஸ்டம்பைத் தாக்கியது. இதே போல்தான் வார்னருக்கு ஒரு பந்து உள்ளே கடுமையாக ஸ்விங் ஆக இடைவேளியில் புகுந்து பவுல்டு ஆனது. 13 பந்துகளில் ஆஸி. தொடக்க வீரர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
ஜார்ஜ் பெய்லி, பிரெடோரியஸ் இன்ஸ்விங்கருக்கு எல்.பி. ஆகி 1 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஸ்மித் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஷம்சி என்ற இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகித் திரும்பி கால்காப்பைத்தாக்க நடுவர் நாட் அவுட் என்றார், ஆனால் டு பிளெசிஸ் ரிவியூ செய்தார், நடுவர் தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டு ஸ்மித் வெளியேறினார். அதே 15வது ஓவரின் கடைசி பந்தில் டிராவிஸ் ஹெட் எல்பி ஆனார், இதுவும் பிளம்ப். ஆஸ்திரேலியா 49/5 என்று தடுமாறியது.
பிறகு மிட்செல் மார்ஷ் 72 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 50 ரன்களையும், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் 58 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 62 ரன்களை 12 ஓவர்களில் சேர்த்தனர். மார்ஷை அபாட் வீழ்த்த வேட் விக்கெட்டை பாங்கிசோ வீழ்த்தினார். கடைசியில் டிரிமெய்ன் 23 ரன்களை எடுக்க ஆஸ்திரேலியா 36.4 ஓவர்களில் 167 ரன்களுக்கு சுருண்டது, உணவு இடைவேளைக்கு முன்னரே சுருண்டது. இந்தப்போட்டியில் டேல் ஸ்டெய்ன், ரபாதா, இம்ரான் தாஹிர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் குவிண்டன் டி காக் (18), ஆம்லா (4) ஆகியோரை டிரெமெய்ன் விரைவில் வீழ்த்த 29/2 என்று ஆனது. பிறகு டுமினி 25 ரன்களை எடுத்து ஸாம்பா பந்தில் ஆட்டமிழந்தார், 85/3. டுபிளெசிஸ் அருமையாக ஆடி 87 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 69 ரன்களை எடுக்க ரைலி ரூசோவ் 33 ரன்களை எடுக்க 35.3 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 168/4 என்று வெற்றிக்கனியைப் பறித்தது. ஆட்ட நாயகனாக கைல் அபாட் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT