Published : 17 Oct 2016 10:42 AM
Last Updated : 17 Oct 2016 10:42 AM
துபாயில் பிங்க் பந்தில் நடைபெறும் பகலிரவு முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டு பாகிஸ்தான் அணி தனது 2-வது இன்னிங்சில் 123 ரன்களுக்குச் சுருண்டது.
இதனையடுத்து 346 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. டேரன் பிராவோ 26 ரன்களுடனும், மர்லன் சாமுவேல்ஸ் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 5-ம் நாளான இன்று மே.இ.தீவுகளுக்குத் தேவை மேலும் 251 ரன்கள், பாகிஸ்தானுக்குத் தேவை 8 விக்கெட்டுகள்.
தேவேந்திர பிஷு 49 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அபாரமான பந்து வீச்சில் பாகிஸ்தானை 123 ரன்களுக்கு வெளியேற்றி அதிர்ச்சித் திருப்பம் அளித்தார். முதல் இன்னிங்சில் அசார் அலியின் முச்சதத்துடன் 579 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த பாகிஸ்தான் மே.இ.தீவுகளை 357 ரன்களுக்குச் சுருட்டியது. 222 ரன்கள் முன்னிலை பெற்றும் பாலோ ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடி 123 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான்.
2001-இல் கொல்கத்தாவில் ஸ்டீவ் வாஹ் பாலோ ஆன் கொடுத்து இந்தியாவிடம் தோல்வி கண்டார், தற்போது மிஸ்பா உல் ஹக் பாலோ ஆன் கொடுக்காமல் தோல்வி அடைந்தால் இது ஒருவேளை மே.இ.தீவுகள் மறு எழுச்சிக்கு வித்திடலாம்.
இந்தியாவின் 500-வது டெஸ்ட் போட்டி சுலபமான வெற்றிக்கு வித்திட, பாகிஸ்தானின் 400-வது டெஸ்ட் போட்டியில் தேவேந்திர பிஷூ இடையீடு செய்துள்ளார்.
பாலோ ஆன் தர மறுத்து பேட் செய்த பாகிஸ்தான் தேநீர் இடைவேளைக்கு முன்பாக 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முச்சத நாயகன் அசார் அலி 2 ரன்களில் கப்ரியேலிடம் எல்.பி. ஆனாக ஆசாத் ஷபிக் பிஷூவின் முதல் விக்கெட்டாக எல்.பி. ஆனார். பிறகு சமி அஸ்லம், பாபர் ஆசம் இணைந்து 57 ரன்களை சேர்த்தனர்.
ஆனால் அதன் பிறகு விரைவு ரன்குவிப்பிற்காக பாகிஸ்தான் வீரர்கள் மோசமான ஷார்ட்களை ஆடியதும், சில அருமையான சுழற்பந்து வீச்சும் இணைய பாகிஸ்தான் தன் கடைசி 8 விக்கெட்டுகளை 46 ரன்களுக்கு இழந்தது. பாபர் ஆசம் தளர்வான ஒரு ஷாட்டை ஆடி பிஷு பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார். அஸ்லம் ஆடிய லேட் கட் முதல் ஸ்லிப்பில் பிளாக்வுட்டிடம் கேட்ச் ஆனது. மிஸ்பா உல் ஹக் ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டை ஆடி பந்தை கோட்டை விட்டு பவுல்டு ஆனார். இடது கை வீரர் மொகமது நவாஸ் பிஷூவின் லெக் பிரேக் ஒன்றை ஆடாமல் விட தவறாக முடிவெடுத்து பவுல்டு ஆனார்.
வஹாப் ரியாஸ் ஸ்லாக் ஸ்வீப்பை பிராத்வெய்ட் டீப் மிட்விக்கெட்டில் பிடித்துப் போட்டார். டின்னருக்கு முன்னதாக ஜேசன் ஹோல்டர் யாசிர் ஷாவை தன் பவுலிங்கிலேயே கேட்ச் பிடித்து வெளியேற்றினார். சர்பராஸ் அகமதுவை ஸ்டம்ப்டு முறையிலும், மொகமது ஆமீரை பவுல்டு முறையிலும் காலி செய்த பிஷூ 13.5 ஓவர்களில் 1 மெய்டனுடன் 49 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அவரது டெஸ்ட் சிறந்த பந்து வீச்சை நிகழ்த்தினார். 31.5 ஓவர்களில் பாகிஸ்தான் 123 ரன்களுக்குச் சுருண்டது.
மேற்கிந்திய அணியில் கே.சி.பிராத்வெய்ட் 6 ரன்களுக்கு மொகமது ஆமிர் பந்தில் பவுல்டு ஆனார். ஜான்சன் (47), டேரன் பிராவோ இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 60 ரன்களை சேர்த்தனர். ஜான்சனும் ஆமீரிடம் எல்.பி.ஆனார். ஆட்ட முடிவில் மே.இ.தீவுகள் 95/2 என்று உள்ளது. பாகிஸ்தான் லெக்ஸ்பின்னர் யாசிர் ஷா, வஹாப் ரியாஸ், மொகமது ஆமிர், மொகமது நவாஸ் ஆகியோரை மீறி மே.இதீவுகள் மேலும் 251 ரன்களை எடுத்து ஒரு அரிய டெஸ்ட் வெற்றியைச் சாதிக்குமா என்பதுதான் 5-ம் நாளின் விறுவிறுப்புக்குரிய சமாச்சாரமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT