Published : 13 Oct 2016 11:46 AM
Last Updated : 13 Oct 2016 11:46 AM
ரைலி ருசோவ்வின் அதிரடி சதத்தின் மூலம் கேப்டவுனில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 5-0 என்று தொடரைக் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா முதன்முதலாக ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு ஒயிட்வாஷ் தோல்வியைப் பெற்றுத் தந்தது.
அனுபவமற்ற ஆஸ்திரேலிய பந்துவீச்சு மட்டுமல்ல, டேவிட் வார்னர் நீங்கலாக ஆஸ்திரேலிய பேட்டிங்கும் சப்பென்று ஆகி வரலாறு காணாது ஒருநாள் போட்டி ஒயிட்வாஷ் தோல்வியை அடைந்தது ஆஸ்திரேலியா.
கேப்டவுனில் நேற்று நடைபெற்ற பகலிரவு ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்தது. ரைலி ரூசோவ் 118 பந்துகளில் 18 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 122 ரன்களையும், ஜே.பி.டுமினி 75 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 73 ரன்களையும் விளாசினர். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் 136 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் 173 ரன்களை எடுத்து டேவிட் வார்னர் இறுதி வரை போராடி 9-வது விக்கெட்டாகத்தான் ஆட்டமிழந்தார், ஆஸ்திரேலியா 48.2 ஓவர்களில் 296 ரன்களுக்கு மடிந்து ஒயிட்வாஷ் செய்யப்பட்டது.
இம்ரான் தாஹிர், கைல் அபாட் ரபாதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, பெலுக்வயோ 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். ஆனால் ரபாதா 9 ஓவர்களில் 84 ரன்களை விட்டுக் கொடுத்தார், வார்னர் இவரை அற்புதமாக ஆடினார்.
இலக்கைத் துரத்தும்போது ஏரோன் பிஞ்ச், வார்னர் இணைந்து 72 ரன்களை சேர்த்தனர். ஆனால் இம்ரான் தாஹிர், ஃபிஞ்ச் மற்றும் ஸ்மித்தை (0) ஒரே ஓவரில் பவுல்டு செய்ய பெய்லியும் பெலுக்வயோ பந்தில் பவுல்டு ஆகா ஆஸ்திரேலியா 75/3 என்று தடுமாறியது. முதலில் மிட்செல் மார்ஷுடன் இணைந்து டேவிட் வார்னர் 11 ஓவர்களில் 64 ரன்களைச் சேர்த்தனர். அப்போது மார்ஷ் 35 ரன்கள் எடுத்த நிலையில் ரபாதாவின் ஒரு பந்தை இலக்கின்றி சுழற்ற பந்து சிக்காமல் பவுல்டு ஆனது.
டிராவிஸ் ஹெட் களமிறங்கியவுடன் அற்புதமான ஒரு மிட்விக்கெட் புஷ்-டிரைவ் பவுண்டரி அடித்தாலும் தென் ஆப்பிரிக்காவி பீல்டிங் அற்புதத்தினால் ரன்கள் மட்டுப்படுத்தப்பட்டது, ரைலி ரூசோவ், டுபிளெசிஸ் மற்றும் டுமினி என்று அனைவரும் அபாரமான பீல்டிங் செய்தனர், இதில் சில பவுண்டரிகள் தடுக்கப்பட்டன.
ஹெட், வார்னர் கூட்டணி 90 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் இன்னமும் 23 ஓவர்கள் உள்ள நிலையில் வெற்றிக்கு ஓவருக்கு 8 ரன்களுக்கும் மேல் தேவைப்பட்டது. ரபாதாவை இரண்டு அருமையான பிளேஸ்மெண்ட் பவுண்டரி அடித்த வார்னர் பிறகு பெலுக்வயோ பந்தையும் அருமையாக பிளேஸ் செய்து இரண்டு பவுண்டரிகளை அடித்து 99 ரன்களை எட்டினார். பிறகு 88 பந்துகளில் சதம் கண்டார்.
தாஹிர் பந்தில் வார்னர் கால்காப்பில் வாங்க ரிவியூவுக்குச் சென்ற போது ரீப்ளேயில் பந்து லெக்ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆனது தெரியவர நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது, ஆனால் இம்ரான் தாஹிருக்கும் வார்னருக்கும் வாக்குவாதம் முற்ற நடுவர், டுபிளெசிஸ் என்று அனைவரும் வந்து சமாதானம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடைசி 10 ஒவர்களில் 99 ரன்கள் தேவை என்ற நிலையில் கைல் அபாட் பந்தை டிராவிஸ் ஹெட் மோசமாக ஆடி கேட்ச் கொடுத்து வெளியேறினார். மேத்யூ வேட் 7 ரன்களில் அபாட் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு தனிமனிதனாகப் போராடிப் பார்த்தார் வார்னர், கடைசியில் 173 ரன்கள் எடுத்து கைவிட்டார், முன்னதாக ரபாதா வீசிய 46வது ஓவரில் யார்க்கரை பவுண்டரி அடித்தது அபாரம், அந்த ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி அபாயகரமாகத் திகழ்ந்தார் வார்னர்.
கடைசியில் டீப் கவருக்கு பந்தை அடித்து 2-வது ரன்னுக்கு ஓடினார், ஆனால் அங்கு இவர் வம்புக்கு இழுத்த இம்ரான் தாஹிர் அருமையான த்ரோவை டி-காக்கிற்கு அடிக்க கதை முடிந்தது. ஆஸ்திரேலியாவின் கதையும் முடிந்தது.
டுமினி, ரூசோவ் அதிரடி:
முன்னதாக முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி மீண்டும் குவிண்டன் டி காக் விக்கெட்டை மலிவாக இழந்தது. ஹஷின் ஆம்லா வழக்கம் போல் 22 பந்துகளில் அதிரடி காட்டி 5 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து மென்னியின் அபாரமான பந்தில் பவுல்டு ஆனார். ஆம்லாவின் கால்நகர்த்தல்களும் மந்தமாகத் தொடங்கியுள்ளது. 11 ரன்களில் டுபிளெசிசும் மென்னியின் அருமையான பந்துக்கு பவுல்யு ஆகி வெளியேறினார். 11 ஓவர்களில் 52/3 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா.
பிறகு டுமினி களமிறங்கினார், அவருக்கு மோசமாக வீசினார் மிட்செல் மார்ஷ், தாழ்வான புல்டாஸ், ஓவர் பிட்ச் என்று வீச ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி தொடங்கிய டுமினி 75 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுக்க, இவரும் ரைலி ரூசோவும் இணைந்து 178 ரன்களை சுமார் 27 ஓவர்களில் 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.
டுமினியும் மென்னியிடம் ஆட்டமிழந்தார். ரூசோவ் ஆக்ரோஷமாக ஆடி 118 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 122 ரன்கள் எடுத்து 45-வது ஓவரில் ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 29 பந்துகளில் 39 ரன்களையும் பெலுக்வயோ ஒரு சிக்சருடன் 11 ரன்களையும் ரபாதா ஒரு சிக்சருடன் 9 ரன்களையும் எடுக்க ஸ்டெய்ன் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ தென் ஆப்பிரிக்கா 327/8 என்ற வெற்றி இலக்கை எட்டியது.
ஆட்ட நாயகனாக டேவிட் வார்னரும், தொடர் நாயகனாக ரைலி ரூசோவும் தேர்வு செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT