Published : 24 Aug 2022 07:11 PM
Last Updated : 24 Aug 2022 07:11 PM
ஆசிய கோப்பை தொடருக்காக தினசரி 100 முதல் 150 சிக்ஸர்களை பயிற்சியின்போது விளாசி சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளதாக பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ஆசிஃப் அலி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் 28-ம் தேதி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தத் தொடரில் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இந்நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் சிறப்பு பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பகிர்ந்துள்ளது. அதில் அவர், “நான் பேட் செய்யும் பொசிஷனில் ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் தேவைப்படும். அந்த ரன்களை எடுக்க பெரிய ஷாட் ஆட வேண்டும். அதற்கு பயிற்சி ரொம்பவே அவசியம். அதனால்தான் தினசரி பயிற்சியில் 100 - 150 சிக்ஸர்களை விளாச முயற்சி செய்தேன். அதன் மூலம் ஆட்டத்தில் ஒரு 4 அல்லது 5 சிக்ஸர்களை ஸ்கோர் செய்ய முடியும் என்பது எனது நம்பிக்கை.
இருந்தாலும் இது அனைத்தும் ஆட்டத்தின் சூழலை சார்ந்து உள்ளது. நான் பேட் செய்ய வரும்போது ஆட்டத்தில் பிரெஷர் இருக்கும். பொதுவாக பந்தை அதன் லைன் மற்றும் லெந்திற்கு ஏற்ற வகையில் நான் அணுகுவேன். ஒரே ஷாட்டை திரும்ப திரும்ப நான் ஆடுவதில்லை. எனது பவர்-ஹிட்டிங் ஆட்டத்திற்கு டேப் பால் (டென்னிஸ் பால்) கிரிக்கெட்டில் விளையாடியது ரொம்பவே உதவியது” என அவர் தெரிவித்துள்ளார்.
இதே துபாய் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஆண்டு இரு அணிகளும் மோதின. அதில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. இந்த மைதானத்தில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியமானது. இருந்தாலும் இந்திய அணி இப்போது புது பாய்ச்சலுடன் ரோகித் தலைமையில் களம் காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT