Published : 25 Jun 2014 03:39 PM
Last Updated : 25 Jun 2014 03:39 PM
ஐபிஎல் கிரிக்கெட் மூலம் நிறைய இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் வருகிறார்கள் என்று கூறப்பட்டாலும் அவர்களில் எவ்வளவு பேர் டெஸ்ட் கிரிக்கெட்டிலோ அல்லது ஒருநாள் கிரிக்கெட்டிலோ நீண்ட காலம் சோபிப்பார்கள் என்று கூற முடியாது.
ஆனால் ஐபிஎல். கிரிக்கெட்டினால் உலக கிரிக்கெட் இழக்கும் வீரர்கள் பட்டியல் நீளமானது. கெவின் பீட்டர்சன் ஐபிஎல் கிரிக்கெட்டினால்தான் இங்கிலாந்தில் தன் இடத்தை இழந்தார். பிளிண்டாஃப் ஐபிஎல் பண ஆசையினால் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். ஆனால் அவரது காயம் அவரது ஐபிஎல். கிரிக்கெட் காலத்தையும் குறைத்தது.
மிகவும் தெரிந்த உதாரணம் லஷித் மலிங்கா, இவர் நன்றாக வீசிக் கொண்டிருக்கும்போதே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். காரணம் இந்த தேதிக்குள் இலங்கை அணி பயிற்சி முகாமில் மலிங்கா ஆஜராக வேண்டும் என்று இலங்கை அணி நிர்வாகம் அறிவுறுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டே வேண்டாம் என்று ஓய்வு அறிவித்து வெளியேறினார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய மைக் ஹஸ்ஸியும் ஐபிஎல் கிரிக்கெட்டினால் களைப்படைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனத்தைச் சிதறவிட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவில் ஃபார்ம் இல்லாமல் கொஞ்ச காலம் கூட அணியில் நீடிக்க முடியாது. அவர்கள் கொள்கையில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள். ஒரு வீரர் எங்கு வேண்டுமானாலும் ஆடலாம், பணம் சம்பாதிக்கலாம் அதில் ஆஸ்திரேலியா தலையிடாது, ஆனால் நாட்டிற்கு ஆடும்போது நன்றாக ஆடவேண்டும் இல்லையேல் அழைத்துப் பேசி விடுவார்கள். அவர் எவ்வளவு பெரிய தாதா வீரராக இருந்தாலும் சரி. ஆஸ்திரேலியா அணிக்கு விளையாடுவது என்பது பன்னாட்டு நிறுவனத்தில் பணீயாற்றுவது போல்தான்.
இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களை இந்தியா இழப்பதற்குப் பிரதான காரணமே ஐபிஎல் கிரிக்கெட்தான். ஜாகீர் கான் அப்போதும் காயமடைந்து வெளியேறினார். இஷாந்த் சர்மா ஐபிஎல் கிரிக்கெட்டில் மணிக்கு 140 கிமீ வேகம் வீசுவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 125-130 கிமீ வேகத்தைத் தாண்ட மாட்டார் காரணம் பயம். காயமடைந்து விட்டால் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போய் விடுமோ என்ற பயமே அவரது வேகத்தைக் குறைத்தது.
முனாஃப் படேல் ஒரு அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளராக வந்திருக்க வேண்டியவர் ஐபிஎல். கிரிக்கெட்டிற்கான பவுலராக மாறி வீணானார். ஐபிஎல் கிரிக்கெட்டினால் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் போன்றோரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களில் சொதப்ப கடைசியில் ஓய்வு பெறுவதே சிறந்தது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். சேவாக் தனது ஆட்டத்தை இழந்ததற்கும் அடிக்கடி காயம் அடைவதற்கும் காரணம் ஐபிஎல் கிரிக்கெட்டாகவே அமைந்தது.
யுவ்ராஜ், ரெய்னா உள்ளிட்ட சிறந்த வீரர்களும் ஐபிஎல் கிரிக்கெட்டினால் பேட்டிங் திறனை இழந்தவர்களாயினர். ரெய்னா மீண்டும் அணிக்கு வந்து கேப்டனானாலும் அவரது ஆட்டத்தில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆர்.பி.சிங், இர்பான் பத்தான், யூசுப் பத்தான் என்று ஐபிஎல் கிரிக்கெட்டினால் சீரழிந்த வீரர்களின் பட்டியல் நீண்டது. அந்த வரிசையில் ஜாகீர் கான் இனி இந்திய அணிக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக இப்போது இந்தியா டெஸ்ட் போட்டித் தொடரை விளையாடவுள்ளது. இதற்கான அணியை அறிவித்தபோது ஜாகீர் கான் இல்லை. அணித் தேர்வுக்குழுவும் ஜாகீர் கானைத் தேர்வு செய்யாதது பற்றி ஒன்றுமே கூறவில்லை. ஆனால் அவர் ஐபிஎல் கிரிக்கெட்டின் போது முதுகு காயம் அடைந்தார். இது அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகவே தற்போது பேசப்பட்டு வருகிறது.
தென் ஆப்பிரிக்கா, மற்றும் நியூசிலாந்து தொடர்களில் சிறப்பாக வீசிய ஜாகீர் கான் ஏன் இங்கிலாந்து தொடருக்கு இல்லை என்பதை பிசிசிஐ தெரிவிக்க மறுத்தது. ஆனால் ஜாகீர் கானின் நீண்ட நாளைய பயிற்சியாளர் சுதிர் நாயக் மிட் டே பத்திரிகைக்கு பேட்டி அளிக்கையில், இனி ஜாகீர் கான் இந்திய அணியில் விளையாட முடியாது, அவர் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் விளையாட வேண்டுமெனில் தற்போது தேர்வாகியுள்ள பவுலர்கள் படு கேவலமாக பந்து வீசினால் மட்டுமே.
மேலும் அணித் தேர்வுக்குழு இனி அவரை அணித் தேர்வுக்குப் பரிசீலனை செய்யவே செய்யாது என்கிறார் அவர். காரணம் 5 நாள் டெஸ்ட் போட்டிக்கு அவர் இனி முழு உடல் தகுதியுடையவராக இருக்க மாட்டார் என்று பிசிசிஐ கருதுகிறது என்கிறார் சுதிர் நாயக். 92 டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் ஜாகீர் கான். கபில்தேவுக்குப் பிறகு சிறந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான். ஆனால் அவரை ஐபிஎல் கிரிக்கெட் அழித்து விட்டது.
அவரது கனவு 100 டெஸ்ட்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே என்கிறார் அவரது பயிற்சியாளர் சுதிர் நாயக், ஆனால் அவரது இந்தக் கனவு வெறும் கனவுதான். அது நிஜமாகப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் அவர்.
இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் அவருக்கு ஏற்பட்ட காயம் அவர் இனிமேல் சர்வதேச கிரிக்கெட்டிற்கு வருவது கடினம் என்பதை அறிவுறுத்துவதாகவே உள்ளது என்கிறார் சுதிர் நாயக். அவர் காயத்திலிருந்து மீண்டு இந்திய அணிக்கு வருவதற்கு 20% வாய்ப்பே உள்ளது என்கிறார் அவர்.
ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவிலும் நியூசிலாந்திலும் மணிக்கு 135 கிமீ வேகம் வீசி பேட்ஸ்மென்களை தொந்தரவு செய்த ஜாகீர் இனி சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்ப முடியாது போனால் அதற்கு முழுப் பொறுப்பு ஐபிஎல். கிரிக்கெட்தான் என்பதை மறுக்க முடியாது.
உடனே ஐபிஎல் கிரிக்கெட் மூலம் மிட்செல் ஜான்சன் தன் பந்து வீச்சைக் கண்டுபிடித்துக் கொண்டாரே என்று கேட்கலாம் ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் அவர் பவுலிங்கை மீண்டும் பெற்றார் என்பது நகைப்புக்குரியதே, ஏனெனில் இந்த சொத்தைப் பிட்சில் அவர் தனது வேகத்தைக் கண்டுபிடித்துக் கொள்ள வழியேயில்லை.
அதற்கு முன்பே காயமடையாமல் அதேவேளையில் நீண்ட ஸ்பெல்களை நல்ல வேகத்துடனும், திறமையுடன் வீசுவது எப்படி என்ற பயிற்சியை டெனிஸ் லில்லியின் ஆலோசனைகளுடன் மேற்கொண்ட பிறகே அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட வந்தார் என்பது பலருக்கும் தெரியாததே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT