Published : 23 Aug 2022 09:53 PM
Last Updated : 23 Aug 2022 09:53 PM
மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள தான் எண்ணியதாக தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இதனை அவர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உடனான இன்ஸ்டாகிராம் லைவ் உரையாடலில் பகிர்ந்துள்ளார்.
31 வயதான ஷமி, இந்திய அணிக்காக 60 டெஸ்ட், 79 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதன் மூலம் 386 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“அந்த நேரத்தில் எனது குடும்பம் எனக்கு ஆதரவு கொடுக்காமல் போயிருந்தால் எனது கிரிக்கெட் வாழ்க்கை காணாமல் போயிருக்கும். மிகுந்த மன உளைச்சல் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் அந்த சமயத்தில் மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். கிரிக்கெட் குறித்து அப்போது நான் எந்த எண்ணமும் கொண்டிருக்கவில்லை. நாங்கள் 24-வது மாடியில் வசித்து வந்தோம்.
நான் மாடியில் இருந்து குதித்து விடுவேன் என குடும்பத்தினர் அச்சம் கொண்டிருந்தனர். எனது நண்பர்கள் 2-3 பேர் எப்போதும் என்னுடன் இருப்பார்கள். அதிலிருந்து வெளிவர கிரிக்கெட்டில் கவனம் செலுத்துமாறு வீட்டில் சொல்லி இருந்தார்கள். அவர்கள் சொன்னபடி டேராடூனில் அமைந்துள்ள கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை தொடங்கினேன்” என தெரிவித்துள்ளார்.
இதில் விபத்து காரணமாக ஐபிஎல் தொடரை மிஸ் செய்தது குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார். எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷமி இடம்பெறவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT