Published : 22 Aug 2022 05:48 PM
Last Updated : 22 Aug 2022 05:48 PM
கராச்சி: ஆசிய கோப்பையில் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி விளையாடாதது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹாக் தெரிவித்துள்ளார். இலங்கை தொடரில் அஃப்ரிடி காயமடைந்தார்.
22 வயதான ஷாஹின் அஃப்ரிடி, பாகிஸ்தான் அணிக்காக 25 டெஸ்ட், 32 ஒருநாள் மற்றும் 40 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளாரான அவர் 208 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டி20 ஃபார்மெட்டை காட்டிலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பவுலிங் எக்கானமி வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித், விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் விக்கெட்டுகளை இவர் கைப்பற்றி இருந்தார். இந்திய அணிக்கு எதிராக இவர் அந்த ஒரு போட்டியில் மட்டும்தான் விளையாடி உள்ளார். இந்நிலையில், அவர் அணியில் இல்லாதது பின்னடைவு என இன்சமாம் தெரிவித்துள்ளார்.
“இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடைசியாக விளையாடிய டி20 போட்டியில் முதல் ஓவரில் இருந்து பேட்ஸ்மேன்களை தனது அபார பந்துவீச்சின் மூலம் அப்செட் செய்து வந்தார் ஷாஹின். அவர் ஆசிய கோப்பை தொடரில் இல்லாதது பின்னடைவுதான். காயம் விளையாட்டின் ஒரு பகுதி. அவர் இல்லாதது கொஞ்சம் கடினம்தான்.
இருந்தாலும் இரு அணிகளும் களத்தில் பலப்பரீட்சை செய்வது த்ரில்லாக இருக்கும். இரு அணிகளும் டி20 கிரிக்கெட் தரமான அணிகள். பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாமை தவிர மற்ற யாருமே தொடர்ச்சியாக ரன் குவிக்காமல் இருப்பது கொஞ்சம் பதற்றமடைய செய்கிறது. ஒரு போட்டியில் ஃபாகர் ஜாமன் மற்றும் ரிஸ்வான் ரன் சேர்க்கின்றனர். அடுத்த சில போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி விடுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT