Published : 30 Oct 2016 10:54 AM
Last Updated : 30 Oct 2016 10:54 AM
விசாகப்பட்டணத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அமித் மிஸ்ராவின் சுழலில் சிக்கி சின்னாபின்னமான நியூஸிலாந்து 79 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி தழுவியதையடுத்து இந்தியா ஒருநாள் தொடரை 3-2 என்று கைப்பற்றியது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக கேப்டன் தோனியும் அவரது சகாக்களும் நியூஸிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளனர்.
ரன் எடுக்கக் கடினமான பிட்சில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்களை எடுத்தது. ரோஹித் சர்மா (70), விராட் கோலி (65) ஆகியோர் அபாரமான முறையில் அரைசதங்களை எடுத்தனர். இலக்கை விரட்டிய நியூஸிலாந்து அணி 23.1 ஓவர்களில் 79 ரன்களுக்குச் சுருண்டது.
டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்காக மிஸ்ரா உட்கார வைக்கப்பட்டார், ஆனால் அவர் இரண்டாவது முறையாக நேற்று 5 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியில் கைப்பற்றினார். 18 ரன்களுக்கு அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் தொடரில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால் ஆட்ட நாயகன் விருதோடு தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார் அமித் மிஸ்ரா. இரண்டு அரைசதங்கள், ஒரு சதம் என்று விராட் கோலி 358 ரன்களை இந்த்த் தொடரில் அதிகபட்சமாக எடுத்தாலும் அமித் மிஸ்ராவுக்கே தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.
பந்துகள் மட்டைக்கு சரியாக வராத பிட்சில் 270 ரன்கள் வெற்றி இலக்கு சவாலானதுதான். ஆனால் 63/2 என்று இருந்த நியூஸிலாந்து இப்படி மடமடவென சரியும் என்று ஒருவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
63/2-லிருந்து நியூஸிலாந்து மேலும் 16 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணியின் தரவரிசை நிலைக்கு ஏற்ப அமையவில்லை.
தொடக்கத்தில் மார்டின் கப்தில் விக்கெட்டை உமேஷ் யாதவ் பவுல்டு முறையில் வீழ்த்தினார். காற்றில் லேசாக உள்ளே வந்த பந்து பிட்ச் ஆகி சற்றே அவுட் ஸ்விங் ஆனது அதாவது லேட் ஸ்விங் ஆக மார்டின் கப்தில் ஒன்றுமே செய்ய முடியவில்லை பவுல்டு ஆனது. மிக அருமையான பந்து ஒருகாலத்தில் கபில்தேவ், ராஜர் பின்னி போன்றவர்கள் இப்படிப்பட்ட பந்துகளை வீசுவார்கள்.
வில்லியம்சன், டாம் லேதம் (19) இன்னிங்ஸை சற்றே நிமிர்த்த முயற்சி செய்த போது டாம் லேதமை ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்தினார். பிட்சில் பந்துகள் நன்றாக திரும்பியதையடுத்து அக்சர் படேலை 9-வது ஓவரில் கொண்டு வந்தார் தோனி. வில்லியம்சன், ராஸ் டெய்லருக்கு சவாலான தருணங்களாக அது அமைந்தது. பவர் பிளே முடிந்த போது ஸ்கோர் 46/2 என்று இருந்தது.
ஸ்கோர் 63/2 என்று இருந்த போது வில்லியம்சனே சரிவைத் தொடங்கி வைத்தார், அக்சர் படேலின் அருமையான பிளைட்டட் பந்தை இறங்கி வந்து இன்சைடு அவுட் ஷாட் அடித்தார் வில்லியன்சன், ஆனால் அவர் நினைத்த மாதிரி நடக்கவில்லை, ஜாதவ் இடது புறம் ஓடி கேட்சைப் பிடித்தார். 40 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த வில்லியம்சன் வீழ்ந்தார்.
இந்நிலையில் 3-வது ஓவரி மிஸ்ரா வீச, டெய்லர் (19) கட் ஆடினார் எட்ஜ் ஆனது அருகிலிருந்து அதனை கேட்ச் பிடித்தார் தோனி. இந்த வகை கேட்ச்களில் தோனி மாஸ்டராகி வருகிறார். அதே ஓவரில் வாட்லிங் அருமையான கூக்ளிக்கு பவுல்டு ஆனார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆனத் அது லெக்ஸ்பின் என்று கணித்து டிரைவ் ஆடப்போனார் வாட்லிங் ஆனால் சிறிது நேரத்தில் ஸ்டம்பைப் பந்து தாக்கிய சப்தம் அவருக்கே கேட்டது. கோரி ஆண்டர்சன் ஜெயந்த் யாதவ்வின் நேர் பந்து அதாவது ‘டெட் ஸ்ட்ரெய்ட்’ என்பார்களே அப்படிப்பட்ட பந்தில் மிக எளிதாக கால்காப்பில் வாங்கி ரன் எடுக்காமல் எல்.பி ஆனார். இடது கை வீரர் நீஷமுக்கு அமித் மிஸ்ரா ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் செய்து திருப்பினார் ஸ்டம்பைத் தாக்கியது. அதே ஓவரில் டிம் சவுதி மிஸ்ராவின் அருமையான பிளைட்டில் ஏமாந்தார், சற்றே பின்னங்கால் கிரீசை விட்டு நகர தோனி பிளாஷ் ஸ்டம்பிங் செய்தார்.
சோதி, ஸ்லாக் ஸ்வீப் சரியாகச் சிக்காமல் டாப் எட்ஜ் ஆக ஸ்லிப்பில் ரஹானேயிடம் கேட்ச் ஆனது மிஸ்ரா 5-வது விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி விக்கெட்டாக சாண்ட்னர் படேலிடம் பவுல்டு ஆனார். நியூஸிலாந்து 23.1 ஓவர்களில் 79 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது.
முன்னதாக கோலியும் ரோஹித் சர்மாவும் அரைசதங்களை எடுத்தனர். முதல் 4 போட்டிகளில் சொதப்பிய ரோஹித் சர்மா 65 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 70 ரன்கள் எடுத்தார், அதுவும் ஆஃப் கட்டர் பந்தை பேக்ஃபுட்டில் லாங் ஆஃபில் அடித்த சிக்ஸ் ரன்னர் முனையில் இருந்த விராட் கோலியின் வாயையே பிளக்க வைத்தது. கோலி 75 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோலி 5 போட்டிகளில் 358 ரன்களை 119.33 என்ற சராசரியில் பெற்றார். சோதி பந்தில் 2-வது முறையாக தொடர்ந்து அவுட் ஆனார் கோலி. தோனி 59 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து சாண்ட்னரிடம் எல்.பி.ஆனார். மணிஷ் பாண்டே ரன் எடுக்காமல் சோதி பந்தில் போல்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கோலி ஆட்டமிழந்த போது ஸ்கோர் 220/5 என்று இருந்தது.
அதன் பிறகு கேதர் ஜாதவ் 37 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 39 ரன்களையும் அக்சர் படேல் 18 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 24 ரன்களையும் எடுக்க இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது.
ஆட்ட மற்றும் தொடர்நாயகனான அமித் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT