Published : 21 Aug 2022 09:10 AM
Last Updated : 21 Aug 2022 09:10 AM

சென்னைக்கும் ‘மஞ்சள் தமிழன்’ தோனிக்கும் இடையேயான உன்னத உறவு | Chennai Day

சென்னை தினம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில் கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் ரசிகர்களால் ‘மஞ்சள் தமிழன்’ என்று அழைக்கப்படுபவருமான மகேந்திர சிங் தோனிக்கும், சென்னைக்கும் இடையே உள்ள உன்னதமான உறவு குறித்து பார்ப்போம். சென்னையை தனது இரண்டாவது தாய்வீடு என தோனியே சொல்லியுள்ளார். அவரை ரசிகர்கள் அன்போடு ‘தல’ என்று அழைப்பது வழக்கம். அந்த செல்லப் பெயருக்கு அவர் பொருத்தமானவரும் கூட. ரசிகர்களுக்கும் அவருக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான பந்தத்தின் வெளிப்பாடுதான் அந்தப் பெயருக்கான காரணம்.

மகிழ்மதிக்கும் பாகுபலிக்கும் இடையே உள்ள கனக்ட்டிவிட்டியை நிஜ வாழ்க்கையில் சென்னை - தோனி பந்தத்தை விவரிப்பாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு இருக்கும் காம்போ இது. அவர் நிஜ வாழ்க்கையிலும், விளையாட்டு கெரியரிலும் பலருக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம்: தோனிக்கும், சென்னைக்கும் இடையிலான பந்தம் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாகவே தொடங்கியது. அவரது டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம் சென்னை மண்ணில் அரங்கேறியது. அந்தப் போட்டி சமனில் முடிந்தது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்ததன் மூலம் வெண்ணிற ஆடை அணிந்து தேசத்திற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் பெருமையை பெற்றார் தோனி. 54 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்களை தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் ஸ்கோர் செய்திருந்தார்.

மொத்தம் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 4876 ரன்களை சேர்த்துள்ளார். சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 4 இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். நான்கும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக நடைபெற்றவை. அனைத்தும் முதல் இன்னிங்ஸ் தான். அதன் மூலம் 323 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 224 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்னாகவும் இது உள்ளது. சென்னையில் 6 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியில் தோனி விளையாடி உள்ளார்.

உறவுக்கு வலு சேர்த்த சிஎஸ்கே: ஐபிஎல் குறித்த அறிவிப்பு வெளியானது. 2008-இல் நடைபெற்ற முதல் ஏலத்தில் பங்கேற்ற அணிகள் சில அஜெண்டாவை கடைப்பிடித்தன. ஒவ்வொரு அணிகளும் தங்கள் நகரை சார்ந்துள்ள மண்ணின் மைந்தர்களை பிக் செய்வதில் ஆர்வம் காட்டின. மும்பைக்கு சச்சின், டெல்லிக்கு சேவாக், பஞ்சாப் அணிக்கு யுவராஜ், கொல்கத்தாவிற்கு சவுரப் கங்குலி, பெங்களூருவுக்கு அனில் கும்ப்ளே போன்ற வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னையை சார்ந்த வீரர்கள் யாரும் அப்போது இல்லாத நேரம் அது. அதனால் 2007 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த தோனியை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சென்னை அணி ஏலத்தில் வாங்கியது. அதற்கு முதல் மற்றும் முழு காரணம் மறைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர். “தோனியை வாங்குவதில் நான் உறுதியாக இருந்தேன். அது குறித்து எனது கருத்தை சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசனிடம் சொல்லி இருந்தேன். முதலில் அவருக்கு அதில் மாற்றுக் கருத்து இருந்தது. ஆனால் தோனியை வாங்கிவிடலாம் என அவரும் ஒரு கட்டத்தில் தெரிவித்தார். தோனிக்கான விலை 1.5 மில்லியன் டாலர்களை கடந்தால் அவரை வாங்க முடியாத சூழல் இருந்தது. ஏனெனில் அணியை நாங்கள் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே கொண்டு உருவாக்க வேண்டியிருந்தது. நல்வாய்ப்பாக அவர் அதற்கு மேல் ஏலம் கேட்கப்படவில்லை. அதனால் சென்னை அணிக்கு அவர் கிடைத்தார். கேப்டன், விக்கெட் கீப்பர், ஃபினிஷர் என பன்முக திறன் கொண்ட இன்ஸ்பிரேஷனல் வீரர் தோனி” என அவர் அப்போது தெரிவித்திருந்தார்.

அவர் சொன்னதை போலவே தோனி, களத்தில் விளையாடினால் தன் அணியினர், ரசிகர்கள் என பலரையும் ஒருங்கிணைத்த வகையில் இருக்கும். அந்த அளவிற்கு ஈர்ப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் வீரர் அவர்.

சென்னை அணி ஏலத்தில் வாங்கிய முதல் வீரர் தோனிதான். இன்று வரை அணியின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீரர்களில் தோனி உள்ளார். அப்போது தொடங்கிய அந்த பயணம் 15 சீசன்கள் கடந்தும் தொடர்ந்து வருகிறது.

சென்னை மாநகரை சுற்றி பைக்கில் வலம் வந்த ‘தல’ - தோனி வாகன பிரியர் என்பது அனைவரும் அறிந்தது. அவரது இல்லமான ‘கைலாஷ்பதி’-இல் உள்ள கராஜில் விலை உயர்ந்த வெளிநாடு மற்றும் உள்நாட்டு கார்கள் மற்றும் பைக்குகளை சேகரித்து வைத்துள்ளார். அனைத்திற்கும் முறையாக வரி செலுத்தியுள்ளார்.

தோனி சென்னை நகரின் மீது மோகம் கொள்ள காரணம் ஒரு பைக் பயணம் என சொல்லப்படுகிறது. அந்த சம்பவத்தை சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் அண்மையில் நினைவுகூர்ந்தார்.

“தோனி சென்னை அணியில் இணைந்ததும் அவருக்கு பைக் பிடிக்கும் என்ற காரணத்தால் பைக் ஒன்றை பரிசளித்தோம். அடுத்த நொடியே அதை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டார். சென்னை நகரின் பரபரக்கும் சாலைகளில் பைக்கில் பயணம் செய்துள்ளார் தோனி. அதுதான் இந்த நகரத்தின் மீதான அவரது மோகத்தை பலப்படுத்தியது. அவர் சென்னை நகரில் பைக்கில் பயணிக்க தீராக் காதலை கொண்டிருப்பவர்” என சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை - தோனி சில துளிகள்

  • தோனிக்கு சென்னையில் பிரியாணி மிகவும் பிடிக்கும் என அவரே எம்.எஸ்.தோனி பட வெளியீட்டின் போது தெரிவித்திருந்தார்.
  • ஃபில்டர் காஃபி பிடிக்கும் எனவும் அப்போது சொல்லி இருந்தார்.
  • இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு தோனி சென்னை அணிக்காக விளையாட திரும்பிய போது ‘தாய் மண்ணுக்கு திரும்பிய தானைத் தலைவன்’ என போற்றப்பட்டர். அவரது கம்பேக்கை பார்க்க ரசிகர்கள் பேர் ஆர்வம் கொண்டிருந்தனர்.
  • அவர் விளையாடும் போது மட்டுமல்ல சென்னை அணியில் பயிற்சி மேற்கொள்வதை பார்க்கவே கோடான கோடி ரசிகர்கள் திரள்வது வழக்கம். அந்த அளவிற்கு ஆத்மார்த்தமான அன்பை சம்பாதித்தவர் அவர்.
  • 41 வயதான அவர் இப்போதும் சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என அவரது ரசிகர்கள் சொல்லி வருவதே அதற்கு ஒரு உதாரணம்.
  • மைதானத்தில் அவர் பேட் செய்ய களம் இறங்கும் போது ‘தோனி… தோனி’ என ஒருமித்த குரலில் ஒலிக்கும் ரசிகர்களின் ஆரவாரம் ஒருவித ஹைப்பை ஏற்படுத்தும். அது சென்னை - சேப்பாக்கம் மைதானம் என்றால் சொல்லவே வேண்டாம். அது இன்னும் ஸ்பெஷலானதாக இருக்கும்.
  • அவரது கோடான கோடி ரசிகர்களில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மண்ணில் கடைசி போட்டி: “இந்த மண்ணில் (சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்) தான் எனது கடைசி கிரிக்கெட் போட்டியின் அரங்கேற்றம் அமையும்” என தோனி சொல்லியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஆகஸ்ட்டில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்ததும் சென்னை அணியின் முகாமில் இருந்த போதுதான்.

"நிச்சயம் நான் அடுத்த சீசனில் விளையாடுவேன். ஏனெனில் சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருந்தால், அது நியாயமானதாக இருக்காது. இதற்கான காரணம் ரொம்பவே சிம்பிள். சிஎஸ்கே ரசிகர்களுக்கு அப்படி செய்வது நன்றாக இருக்காது" என கடந்த சீசனிலும் தோனி சொல்லியுள்ளார். எதிர்வரும் 2023 ஐபிஎல் சீசன் சென்னை மண்ணில் நடைபெற வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x