Published : 03 Oct 2016 02:26 PM
Last Updated : 03 Oct 2016 02:26 PM

டுபிளெசிஸ் அதிரடி சதம்: ஆஸி.யை மீண்டும் பந்தாடிய தெ.ஆ.

ஜொஹான்னஸ்பர்கில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை தென் ஆப்பிரிக்கா புரட்டி எடுத்து 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

முதல் போட்டியில் குவிண்டன் டி காக் ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு சமாதி கட்டியதை அடுத்து டாஸ் வென்று முதலில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தார் ஸ்மித். ஆனால் ரைலி ரூசோவ், டுபிளெஸிஸ், டுமினி இம்முறை ஆஸ்திரேலிய பந்து வீச்சை புரட்டி எடுத்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 361 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 37.4 ஓவர்களில் 219 ரன்களுக்கு சுருண்டது.

ரன்கள் அடிப்படையில் ஆஸ்திரேலியாவின் 5-வது பெரிய ஒருநாள் தோல்வியாகும் இது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையடுத்த பெரிய உதை இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 1987-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக 164 ரன்கள் வித்தியாச தோல்வி, 2006-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 196 ரன்களில் தோல்வி, 1986-ல் நியூஸி.க்கு எதிராக 206 ரன்களில் தோல்வி.

ஆஸ்திரேலியாவின் வலுவற்ற பந்துவீச்சு மைதானம் முழுதும் சிதறடிக்கப்பட கேப்டன் டுபிளெசிஸ் 93 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 111 ரன்களை விளாசினார். இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவர் எடுக்கும் 3-வது ஒருநாள் சதமாகும்.

ஜே.பி. டுமினி என்பதை விட 'டுமீல்' டுமினி என்பதுதான் பொருத்தம் 58 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 82 ரன்களை புரட்டி எடுத்ததோடு, கேப்டனுடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 150 ரன்களை சுமார் 18 ஓவர்களில் விளாசியது திருப்புமுனையாக அமைந்தது.

டி காக் அன்று சாத்திய சாத்துமுறையில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்காட் போலண்ட், டேனியல் வொரல் ஆகியோரை நீக்கி மென்னி, டிரெமெய்ன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்கியது. மென்னி, டிரெமெய்ன் ஆகியோர் எப்போதாவது மட்டையைக் கடந்து பந்து செல்லுமாறு வீசினரே தவிர மற்றபடி இடையிடையே பவுண்டரிகள் பறந்தன, குறிப்பாக ரைலி ரூசோவ் ஆஃப் திசையில் பொளந்து கட்டினார். ஜான் ஹேஸ்டிங்ஸ் வந்த பிறகே டி காக் (22) விக்கெட்டைக் கைப்பற்றினார், தூக்கி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்தார். டுபிளெசிஸ் மற்றும் ரூசோவ் ஸ்கோரை 24 ஓவர்களில் 146 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.

81 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்த ரூசோவ், ஹேஸ்டிங்ஸ் பந்தை தூக்கி அடித்து கேட்ச் கொடுத்தார். அதன் பிறகு டுமினி இணைய டுபிளெசிஸ் அருமையாக இடைவெளிகளில் தட்டி விட்டு ரன்களை சேர்த்ததோடு சில பவர் ஷாட்களையும் அடித்து 84 பந்துகளில் சதம் கண்டார். டுமினி 44 பந்துகளில் அரைசதம் கண்டார், அதன் பிறகுதான் டுமினி 3 சிக்சர்களை அடிக்க ஸ்கோர் 400-ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டுமினி மார்ஷ் பந்தில் பவுல்டு ஆக, டுபிளெசிஸ் 111 ரன்களில் மார்ஷிடம் அவுட் ஆக கடைசியில் மில்லர், பிஹார்டீன் ஆகியோரின் சிறிய பங்களிப்பின் மூலம் தென் ஆப்பிரிக்கா 361 ரன்களை எட்டியது.

ஆஸ்திரேலியா தரப்பில் புதிய வீச்சாளர்களான மென்னி, டிரெமெய்ன் இருவரும் 10 ஒவர்கள் வீசி முறையே 78, 82 ரன்களை விட்டுக் கொடுத்தனர். ஹேஸ்டிங்ஸ் மட்டுமே 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற லெக்ஸ்பின்னர் ஸாம்பாவுக்கு பந்துகள் ஒன்றுமேயாகவில்லை.

குவிண்டன் டி காக் பிடித்த திருப்பு முனை கேட்ச்:

ஆஸ்திரேலியா இன்னிங்ஸை தொடங்கியபோது ஏரோன் பிஞ்ச் 1 ரன் எடுத்து ரபாதா வீசிய வேகமான பந்தை அடிக்க முயன்று அருகிலேயே வானத்தில் கொடியேற்றினார். பெஹார்டீன் கேட்சை பிடித்தார். ஸ்டீவ் ஸ்மித், அபாரமாக வீசிக் கொண்டிருந்த டேல் ஸ்டெய்னை 2 அற்புதமான பவுண்டரிகள் அடித்து 12 பந்துகளில் 14 எடுத்து செட்டில் ஆகும் வேளையில் குவிண்டன் டி காக்கின் அதிர்ச்சிகரமான கேட்சிற்கு அவுட் ஆகி வெளியேறினார்.

அதாவது டேல் ஸ்டெய்னின் லெக் திசை பந்து ஒன்றை ஆட முயல அதனை குவிண்டன் டி காக் லெக் திசையில் டைவ் அடித்து ஒரு கையில் பிடித்தது ஆச்சரியகரமான கேட்ச். ஸ்மித் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் ஒருமுனையில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 56 பந்துகளில் அரைசதம் கண்டாலும் டுமினி வீசிய அரைக்குழி பந்தை மிட் விக்கெட் கையில் நேராக அடித்து மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

டிராவிஸ் ஹெட் 45 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 51 ரன்களையும், மேத்யூ வேட் 33 ரன்களையும் எடுத்தது தோல்வியை சற்று நேரம் தள்ளிப்போட்டதைத் தவிர வேறு ஒன்றையும் சாதிக்கவில்லை. தென் ஆப்பிரிக்க அணியில் ரபாதா 2 விக்கெட்டுகளையும், வெய்ன் பார்னெல் 3 விக்கெட்டுகளையும் பெஹ்லுக்வயோ சாத்து வாங்கினாலும் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற மீண்டும் இம்ரான் தாஹிர் சிக்கனமாக 7 ஓவர்களில் 31 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டையும் டுமினி ஒரு விக்கெட்டையும் கைப்பற்ற 37.4 ஓவர்களில் ஆஸ்திரேலியா 219 ரன்களுக்குச் சுருண்டது.

ஆட்ட நாயகனாக டுபிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x