Published : 16 Aug 2022 07:42 AM
Last Updated : 16 Aug 2022 07:42 AM
புதுடெல்லி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு பிப்ரவரி – மார்ச் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2004-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என வென்றிருந்தது. இதன் பின்னர் இதுவரை இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணியால் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியவில்லை.
இந்நிலையில் சமீபகாலமாக ஆஸ்திரேலிய அணி துணைக்கண்டங்களில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-1 என டிரா செய்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கிளென் மெக்ராத் கூறியதாவது:
இந்தியாவுக்கு வருவதும் சிறப்பாக செயல்பட்டு டெஸ்ட் தொடரை வெல்வதும் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது நல்ல திட்டங்களுடன் வரவேண்டும். சுழலும் ஆடுகளங்களுக்கு தகுந்தவாறு பேட்ஸ்மேன்கள் தங்களை தகவமைத்துக்கொள்வதை கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் பந்து வீச்சாளர்களும் அந்த சூழ்நிலையில் பந்துவீச கற்றுக்கொள்ள வேண்டும்.
இலங்கை, பாகிஸ்தானில் வெளிப்படுத்திய செயல்திறனை பார்க்கும் போது தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணியினர் துணைக்கண்டங்களில் உள்ள ஆடுகளங்களில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் இந்தியா இன்னும் சவால் அளிக்கக்கூடியதாகவே உள்ளது. இம்முறை ஆஸ்திரேலிய அணி சவாலுக்கு தயாராக உள்ளதாகவே நினைக்கிறேன். இவ்வாறு கிளென் மெக்ராத் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT