Published : 12 Aug 2022 04:00 PM
Last Updated : 12 Aug 2022 04:00 PM

பிஃபா உலகக் கோப்பை 2022 | ஒருநாள் முன்கூட்டியே தொடங்கும் கால்பந்து திருவிழா

தோஹா: கத்தார் நாட்டில் வரும் நவம்பரில் தொடங்கவுள்ள பிஃபா உலகக் கோப்பை 2022 கால்பந்து தொடர் ஒருநாள் முன்கூட்டியே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பல்வேறு தகவல்கள் உறுதி செய்துள்ளன. அதன்படி பார்த்தால் நவம்பர் 21-ம் தேதி தொடங்க இருந்த முதல் சுற்று போட்டிகள் 20-ம் தேதியே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிஃபா), கத்தார் நாட்டில் கால்பந்து உலகக் கோப்பை தொடரை நடத்த உள்ளது. மொத்தம் 32 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. 8 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

கத்தார் நாட்டில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்கள் இதில் விளையாடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நவம்பர் 21-ம் தேதி தொடங்கும் என சொல்லப்பட்ட இந்தத் தொடர் இப்போது 20-ம் தேதியே தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முதல் போட்டியில் தொடரை நடத்தும் கத்தார் அணி, ஈக்குவேடாரை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி 20-ம் தேதி மாலை 07 மணி அளவில் தொடங்கும் என சொல்லப்பட்டுள்ளது. மற்ற அனைத்து போட்டிகளும் முன்னர் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடரை நடத்தும் நிர்வாகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 முதல் கால்பந்து உலகக் கோப்பை தொடரை நடத்தும் நாட்டின் அணி தொடக்க போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்து, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, பெல்ஜியம், குரோஷியா, பிரேசில், போர்ச்சுகல் போன்ற அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. இத்தாலி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கால்பந்து உலகக் கோப்பை தொடரில் விளையாடும் தகுதியை இழந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x