Published : 09 Aug 2022 05:36 PM
Last Updated : 09 Aug 2022 05:36 PM
மாமல்லபுரம்: நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் ‘ஏ’ அணியும், இந்திய ‘பி’ அணியும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளன. இதில் இந்திய மகளிர் ‘ஏ’ அணியினர் தங்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது கைகூடவில்லை.
ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கமும், அர்மீனியா வெள்ளியும், இந்தியா பி வெண்கலமும் வென்றது. மகளிர் பிரிவில் உக்ரைன் தங்கமும், ஜார்ஜியா வெள்ளியும், இந்திய மகளிர் ‘ஏ’ வெண்கலமும் வென்றது.
இந்தத் தொடரில் மொத்தம் 11 சுற்றுகள் நடைபெற்றன. இதில் அமெரிக்காவுக்கு எதிராக இன்று நடைபெற்ற இறுதி சுற்றில் இந்திய மகளிர் ‘ஏ’ அணி 1-3 என்ற கணக்கில் அந்த சுற்றை இழந்தது. அதன் மூலம் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.
ஜெர்மனி அணிக்கு எதிராக இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய ஓபன் ‘பி’ அணி 3-1 என சுற்றை கைப்பற்றியது. இதன் மூலம் அந்த அணியும் இந்த தொடரில் வெண்கலம் வென்றுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிராக தோல்வி
10-வது சுற்று முடிவில் இந்திய மகளிர் ‘ஏ’ அணி 17 புள்ளிகளை பெற்றிருந்தது. 11-வது சுற்றில் வெற்றி பெற்றால் தங்கப் பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவுக்கு எதிராக மிக முக்கியமான இறுதிச் சுற்றில் இந்திய மகளிர் அணி 1-3 என தோல்வியை தழுவியது.
India A wins bronze medals in the Women's section of the home Chess Olympiad.
by Stev Bonhage and Lennart Ootes #ChessOlympiad pic.twitter.com/hPfHBCzQPM
இந்த சுற்றில் வெள்ளை நிற காயில் விளையாடிய கோனேரு ஹம்பி, அமெரிக்க வீராங்கனை டோகிர்ஜோனோவா குல்ருக்பேகிமுக்கு எதிராக ஆட்டத்தை டிரா செய்தார். தொடர்ந்து கருப்பு நிற காயில் விளையாடிய வைஷாலியும், க்ருஷ் இரினாவுக்கு எதிராக ஆட்டத்தை சமனில் நிறைவு செய்தார்.
பின்னர் வெள்ளை நிற காயில் விளையாடிய தானியா சச்தேவ், யிப் கரிசாவுக்கு எதிராக ஆட்டத்தை இழந்தார். தொடர்ந்து கருப்பு நிற காயில் விளையாடிய குல்கர்னி பக்தி, ஆபிரகாம்யான் ததேவுக்கு எதிராக ஆட்டத்தில் தோல்வியை தழுவினார். இதன் காரணமாக 11-வது சுற்றில் தோல்வியை தழுவி வெண்கலம் வென்றுள்ளது இந்தியா ‘ஏ’ மகளிர் அணியினர். செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி வெல்லும் முதல் பதக்கம் இது.
மகளிர் பிரிவில் உக்ரைன் தங்கமும், ஜார்ஜியா வெள்ளியும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மகளிர் பிரிவில் இந்திய ‘பி’ அணி 16 புள்ளிகளும், இந்திய ‘சி’ அணி 15 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.
ஜெர்மனியை வீழ்த்திய இந்திய ‘பி’ அணி
ஓபன் பிரிவில் இறுதி சுற்றான 11-வது சுற்றில் இந்திய ‘பி’ அணி ஜெர்மனியை 3-1 என வீழ்த்தியுள்ளது. போர்டு 1-ல் கருப்பு நிற காயில் விளையாடிய குகேஷ், கீமர் வின்சென்டுக்கு எதிராக ஆட்டத்தை சமனில் முடித்தார். தொடர்ந்து வெள்ளை நிற காயில் விளையாடி சரின் நிகல், புளூபாம் மத்தியாஸுக்கு எதிராக ஆட்டத்தை வென்றார்.
கருப்பு நிற காயில் விளையாடிய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, ஸ்வான் ராஸ்மஸுக்கு எதிராக ஆட்டத்தை சமனில் முடித்தார். வெள்ளை நிற காயில் விளையாடிய சத்வானி ரவுனக், நிசிபேனு லிவியு-டைட்டருக்கு எதிரான ஆட்டத்தை வென்றார். ஓபன் பிரிவில் இந்திய ‘ஏ’ அணி 17 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய ‘சி’ அணி 14 புள்ளிகளுடன் 31-வது இடத்தை பிடித்துள்ளது.
தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியர்கள்
இது தவிர தனிநபர் பிரிவில் இந்திய வீரர்கள் குகேஷ் மற்றும் சரின் நிகல் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். அர்ஜுன் எரிகாசி வெள்ளியும், பிரக்ஞானந்தா வெண்கலமும் வென்றுள்ளனர். மகளிர் பிரிவில் வைஷாலி, தானியா, திவ்யா ஆகியோரும் வெண்கலம் வென்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT