Published : 12 Oct 2016 03:34 PM
Last Updated : 12 Oct 2016 03:34 PM
எதிரணியினரிடம் வாக்குவாதம், நடுவர்களிடம் வாய்ப்பேச்சு, பிட்சை சேதம் செய்யும் விதமாக செயல்படுவது போன்ற நடத்தைகளுக்காக ரவீந்திர ஜடேஜா மற்றும் வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் ஆகியோர் தடையை எதிர்நோக்கியுள்ளனர்.
நியூஸிலாந்துக்கு எதிரான இந்தூர் டெஸ்ட் போட்டியில் 27 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜா வேண்டுமென்றே பிட்சை சேதம் செய்யும் நோக்கத்துடன் ‘அபாய பகுதி’ என்று அழைக்கப்படும் பகுதிக்குள் ஓடி வந்தார், இதனால் நடுவர் புரூஸ் ஆக்சன்ஃபோர்ட் எச்சரித்ததோடு, நியூஸிலாந்துக்கு 5 அபராத ரன்களை வழங்கினார். கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் போதும் பந்து வீச்சில் அப்பீல் செய்வதை சாக்காக வைத்து பிட்சை சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதற்காக நடுவர்களால் அதிகாரபூர்வமாக எச்சரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
4-வது முறையாக பிட்சை சேதப்படுத்த முயற்சி செய்ததால் 3 தகுதியிழப்புப் புள்ளிகளைப் பெற்றுள்ளார் ஜடேஜா. இன்னும் ஒரு தகுதியிழப்புப் புள்ளியை அவர் பெற்றால் ஒரு டெஸ்ட், அல்லது 2 ஒருநாள் போட்டிகள் அல்லது 2 டி20 போட்டிகளுக்கு தடை விதிக்கப்படலாம்.
சபீர் ரஹ்மான் கதை நடத்தையைப் பொறுத்தது. செப்டம்பர் 25-ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் எல்.பி. தீர்ப்பு குறித்து நடுவர் ஷார்ஃபுத்தவ்லாவிடம் தகராறு செய்தார். பிறகு இங்கிலாந்துக்கு எதிராக இவரும் கேப்டன் மஷ்ரபே மோர்டசாவும் அநாகரீகமாக கொண்டாடியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்தது.
இதனையடுத்து இவரும் 3 தகுதியிழப்புப் புள்ளிகள் பெற்றுள்ளார், இதனையடுத்து இன்னும் ஒரு சம்பவத்தில் இவர் முறைதவறி நடந்தால் தடை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தை வெற்றி பெற்ற போட்டியில் வங்கதேசம் அநாகரீகமான முறையில் வெற்றியைக் கொண்டாடியதாக இங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தனது ஏமாற்றத்தை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT