Published : 06 Aug 2022 09:52 PM
Last Updated : 06 Aug 2022 09:52 PM
பர்மிங்ஹாம்: காமன்வெல்த் தொடரில் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்து - இந்திய அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கை முதலில் துவங்கிய இந்திய அணிக்கு ஷெபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இணை சிறப்பான துவக்கம் கொடுத்தது. ஸ்மிருதி மந்தனா ஒருபுறம் அதிரடியாக ரன்களை குவிக்க, 10 ரன்கள் ரேட்டில் ரன்கள் சேர்ந்தது. ஸ்மிருதிக்கு பக்கபலமாக ரோட்ரிக்ஸ் சேர்ந்துகொள்ள இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 61 ரன்களும், கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோட்ரிக்ஸ் 44 ரன்களும் குவித்தனர்.
இந்த தொடரில் பலமிக்க அணியாக விளங்கிய இங்கிலாந்து, இன்றைய போட்டியில் ரன் அவுட்களால் வீழ்ந்தது எனலாம். மூன்று முக்கியமான ரன் அவுட் அந்த அணியை தோல்வியை நோக்கி நகர்த்தியது. இங்கிலாந்து அணிக்கு முதல்கட்ட வீராங்கனைகள் ஓரளவு சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், வெற்றியை நெருங்க வைத்தது நடாலி ஸ்கிவர் மற்றும் எமி ஜோன்ஸ் இருவரும் இணைந்து தான். இறுதிக்கட்டத்தில் இவர்கள் களத்தில் இருந்தால் வெற்றி என்ற நிலை இருக்க, தனியா பாட்டியா மற்றும் ஸ்மிருதி இணைந்து 41 ரன்கள் எடுத்திருந்த நடாலி ஸ்கிவரை ரன் அவுட் செய்தனர். இது 19வது ஓவரின் கடைசி பந்தில் நிகழ்ந்தது. அதற்கு முந்தையை ஓ ஓவரில் தான் 31 ரன்கள் எடுத்திருந்த எமி ஜோன்ஸை இந்திய வீராங்கனைகள் ராதா யாதவ் மற்றும் சினே ராணா இணைந்து ரன் அவுட் செய்தனர்.
இந்த ரன் அவுட்களால் இங்கிலாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியது. அதேநேரம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணியுடன் இந்திய அணி இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment