Published : 06 Aug 2022 12:51 AM
Last Updated : 06 Aug 2022 12:51 AM
பர்மிங்கம்: நடப்பு காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் இந்திய மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, தீபக் புனியா, அன்ஷு மாலிக் மற்றும் சாக்ஷி மாலிக், திவ்யா கக்ரன் ஆகியோர் அடுத்தடுத்து பதக்கங்களை வென்று வருகின்றனர்.
ஆடவர் ஃப்ரீஸ்டைல் 86 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா பாகிஸ்தானின் முகமது இனாமை எதிர்கொண்டார். இதில், 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் தீபக் புனியா. இதன்மூலம் தங்கப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் தொடரில் தீபக் புனியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். அதேநேரம், இது இந்தியாவுக்கு 9வது தங்கப் பதக்கம் ஆகும். முன்னதாக, ஆடவர் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் பஜ்ரங் புனியாவும், மகளிர் ஃப்ரீஸ்டைல் 62 கிலோ பிரிவில் சாக்ஷி மாலிக்கும் இன்று தங்கப் பதக்கம் வென்றிருந்தனர்.
இதனிடையே, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் 68 கிலோ பிரிவில் விளையாடிய இந்தியாவின் திவ்யா கக்ரன் வெற்றிபெற்றார். மேலும், ஆடவர் 125 கிலோ பிரிவில் மோஹித் க்ரேவால் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
முன்னதாக, மகளிர் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக் நைஜீரியாவின் ஒடுனாயோ ஃபோலாசடே அடேகுரோயேவை எதிர்கொண்டார். இதில் அன்ஷு மாலிக் தோல்வியை தழுவியதால், அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் மல்யுத்தத்தில் இன்று மட்டும் 6 பதக்கம் கிடைத்துள்ளது. இதில் 3 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் பதக்கங்கள் அடக்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT