Published : 04 Aug 2022 10:12 PM
Last Updated : 04 Aug 2022 10:12 PM

சிஎஸ்கே அணியுடனான எதிர்காலம்: நான்கு வார்த்தை ரிப்ளையை டெலிட் செய்த ஜடேஜா? ரசிகர்களின் ரியாக்‌ஷன்

ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது பயணத்தை தொடருவாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்நிலையில், சென்னை அணியின் ட்வீட்டுக்கு அவர் செய்த நான்கு வார்த்தைகள் அடங்கிய ரிப்ளையை டெலிட் செய்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது. அப்படி என்ன செய்தார் ஜடேஜா?

கடந்த மே மாதம் நிறைவடைந்த 15-வது ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பானதாக அமையவில்லை. 14 போட்டிகளில் வெறும் நான்கில் மட்டுமே சென்னை வெற்றி பெற்றிருந்தது. அதோடு தொடரை 9-வது இடம் பிடித்து நிறைவு செய்திருந்தது.

15-வது ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக கேப்டன் பொறுப்பை ஜடேஜா வசம் ஒப்படைத்தார் தோனி. இருந்த போதிலும் தனது தலைமையிலான அணியில் தொடர் தோல்விகள் மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக கேப்டன் பொறுப்பை தோனி வசம் மீண்டும் ஒப்படைத்தார் ஜடேஜா. அதோடு சென்னை அணியின் கடைசி நான்கு போட்டிகளில் ஜடேஜா விளையாடமால் மிஸ் செய்தார். அப்போது முதலே சென்னை அணியுடனான அவரது எதிர்காலம் குறித்து பேசப்பட்டு வருகிறது.

ஜடேஜாவும் சிஎஸ்கே-வும்!

2012 சீசன் முதல் ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். பவுலிங், பேட்டிங், ஃபில்டிங் என மிகவும் பிசியாக களத்தில் கலக்குவார். தோனி படையின் சேனாதிபதி. சென்னை அணிக்காக 142 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 1440 ரன்கள், 69 கேட்சுகள் மற்றும் 105 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

கடந்த சீசனில் சென்னை அணி தக்கவைத்த நான்கு வீரர்களில் ஜடேஜாவுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அது நான்கு ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த தோனியை இரண்டாவது சாய்ஸாக பிக் செய்து கொடுக்கப்பட்ட முன்னுரிமை. அதன் மூலம் அப்போதே சென்னை அணி ஜடேஜாவுக்கான எதிர்கால திட்டத்தை தெளிவாக தெரிவித்து இருந்தது. இப்படி எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. கடந்த சீசனை தவிர.

ஜடேஜாவின் சமூக வலைதள செயல்பாடு?

கடந்த சீசனில் சென்னை அணியுடனான கசப்பான அனுபவத்திற்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து 2021 மற்றும் 2022 ஐபிஎல் சீசனில் சென்னை அணி சார்ந்த பதிவுகளை நீக்கினார் ஜடேஜா. இந்நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஜடேஜா, சென்னை அணிக்கு தான் கொடுத்த ரிப்ளையை டெலிட் செய்துள்ளதாக சொல்லபப்டுகிறது. அதுதான் இப்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி 4-ம் தேதி சென்னை அணி இந்த ட்வீட்டை பதிவு செய்திருந்தது. சென்னை உடன் ஜடேஜாவின் 10 ஆண்டுகால பயணத்தை குறிப்பிடும் ட்வீட் அது. அதற்கு ரிப்ளை செய்த ஜடேஜா “10 more to go” என சொல்லியிருந்தார்.

இப்போது அந்த ட்வீட்டுக்கு தான் கொடுத்த ரிப்ளையை ஜடேஜா டெலிட் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதை மையமாக வைத்து ரசிகர்கள் பல்வேறு விதமாக கருத்து சொல்லி வருகின்றனர்.

ரசிகர்களின் ரியாக்‌ஷன்

“சென்னை அணியை விட்டு விலக வாய்ப்பே இல்லை”, “தோனி மற்றும் பிளெம்மிங் போன்றவர்கள் ஜடேஜாவுடன் பேசுவார்கள். அவரை தக்க வைப்பார்கள்”, “தரமான இந்திய ஆல்-ரவுண்டரை பிக் செய்து கொள்ளலாம்”, “இந்த செயல் ஜடேஜாவின் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடு” என ரியாக்ட் செய்துள்ளனர். சென்னை அணியுடன் ஜடேஜாவின் பயணம் தொடருமா? என்பது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிந்துவிடும். அதுவரை காத்திருப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x