Published : 03 Aug 2022 06:16 AM
Last Updated : 03 Aug 2022 06:16 AM
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் வெற்றி பெற்றன.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 5-வது நாளான நேற்று ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி, ருமேனியாவை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. ஹரிகிருஷ்ணா பென்டலா - டீக் போக்டன்-டேனியல், விதித் குஜராத்தி - லுபுலெஸ்கு கான்ஸ்டன்டின், எஸ்.எல்.நாராணயன் - ஜியானு விளாட் கிறிஸ்டியன் ஆகியோர் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. அர்ஜுன் எரிகைசி 46-வது நகர்வின் போது பார்லிகிராஸ் மிர்சியா எமிலியனை தோற்கடித்தார்.
இந்திய பி அணி 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்தது. டி.குகேஷ், ஷிரோவ் அலெக்ஸியையும் பி.அதிபன், இதுரிசாகா போனெல்லி எட்வர்டோவையும் தோற்கடித்தனர். அன்டன் குஜர்ரோ டேவிட்டுக்கு எதிரான ஆட்டத்தை சரின் நிகல் டிராவில் முடித்தார். ஆர்.பிரக்ஞானந்தா, சாண்டோஸ் லதாசா ஜெய்முக்கு எதிரான ஆட்டத்தில் 85-வது நகர்வின் போது தோல்வியடைந்தார்.
இந்திய சி அணியானது சிலியை 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. கங்குலி சூர்யா சேகர், ஹென்ரிக்ஸ் வில்லக்ரா கிறிஸ்டோபலுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார். எஸ்.பி சேதுராமன், இவான் மொரோவிக்கையும் அபிமன்யு, லோபஸ் சில்வா ஹ்யூகோவையும் தோற்கடித்தனர். கார்த்திகேயன் முரளி, சலினாஸ் ஹெர்ரெரா பேப்லோவிடம் தோல்வியடைந்தார்.
மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி பிரான்ஸுடன் மோதியது. இதில் இந்திய ஏ அணி 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. கோனேரு ஹம்பி - மேரி செபாக், ஹரிகா துரோண வல்லி- சோஃபி மில்லியட், ஆர்.வைஷாலி - சவினா அனஸ்டசியா மோதிய ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன. தானியா சச்தேவ் 38-வது நகர்த்தலின் போது ஆண்ட்ரியா நவ்ரோடெஸ்குவை தோற்கடித்தார்.
இந்திய பி அணி ஜார்ஜியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய பி அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது. சவுமியாசாமிநாதன், லேலா ஜவகாஷ்விலியிடமும் திவ்யா தேஷ்முக், மேரி அரபிட்ஸியிடமும் தோல்வியடைந்தனர். வந்திகா அகர்வால் - நானா ஜாக்னிட்ஸே, பத்மினி ரவுத் - நினோ பாட்சியாஷ்விலி ஆகியோர் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
இந்திய சி அணியானது பிரேசிலை எதிர்த்து விளையாடியது. ஈஷா கரவாடே, ஜூலியா அல்போரேடோ மோதிய ஆட்டமும் விஷ்வா வஸ்னாவாலா, கசோலா வனேசா ராமோஸ் மோதிய ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது. அதேவேளையில் நந்திதா, லிப்ரேலாடோ கேத்தி கெலார்டை தோற்கடித்தார். பிரத்யுஷா போதா59-வது நகர்வின் போது தேராவ்ஜூலியானா சயுமியிடம் தோல்வியடைந்தார். இதனால் பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய சி அணி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடித்தது.
ஷிரோவை வீழ்த்தியது மகிழ்ச்சி
ஓபன் பிரிவில் விளையாடும் இந்திய பி அணி வீரர் டி.குகேஷ் 5வது வெற்றியை பதிவு செய்தார். அவர் கூறும்போது, “முன்னாள் உலக சாம்பியனான ஷிரோ போன்ற திறமையான வீரருக்கு எதிராக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் அவரை வீழ்த்துவது என்பது சிறப்பான விஷயம். ஷிரோவ் செய்த ஒரு தவறால் நான் நல்ல நிலையை பெற்றேன். அதில் இருந்து மெதுவாக ஆதிக்கம் செலுத்தினேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment