Published : 05 Jun 2014 10:00 AM
Last Updated : 05 Jun 2014 10:00 AM
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-2 என்ற கணக்கில் இலங்கை வென்றது. பெர்மிங்ஹாமில் நடைபெற்ற 5-வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்த தீர்மானித்தது. 48.1 ஓவர்களில் 219 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. அடுத்து விளையாடிய இலங்கை 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 222 ரன்கள் எடுத்து வென்றது.
இங்கிலாந்து அணியில் கேப்டன் அலைஸ்டர் குக், இயன் பெல் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். 15 ஓவர்களில் இங்கிலாந்து 76 ரன்களை எடுத்தது. அப்போது பெல் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த பேலன்ஸ், ரூட் ஆகியோர் தலா 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுறையில் சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் குக் அரைசதம் அடித்தார். அவர் 85 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இலங்கை வீர்களின் அபார பந்து வீச்சு, பீல்டிங்குக்கு முன்னால் இங்கிலாந்து வீரர்களால் தாக்குப்பிடித்து விளையாட முடியவில்லை. மோர்கன், ரவி போபாரா ஆகியோர் முறையே 17 ரன்களை மட்டும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பட்லர் 21 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஜோர்டான் மட்டும் தாக்குப் பிடித்து விளையாடி 42 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.
பின்வரிசை வீரர்களான டிரெட்மில், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் 0, 5 ரன்களில் மலிங்காவின் வேகப் பந்து வீச்சில் வீழ்ந்தனர். இதனால் இங்கிலாந்து 48.1 ஓவர்களில் 219 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை தரப்பில் மலிங்கா 3 விக்கெட்டுகளையும், அஜந்தா மெண்டீஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் 220 ரன்களை இலக்காகக் கொண்டு விளை
யாடிய இலங்கை அணியில் தில்ஷான், பெரைரா ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர்.தொடக்கம் முதலே தில்ஷான் அதிரடியாக விளையாடினார். இதனால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. தில்ஷான் 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரைரா 19 ரன்களிலும், சங்ககாரா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
எனினும் ஜெயவர்த்தனே, திரிமனே ஆகியோர் நிலைத்து நின்று விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஜெயவர்த்தனே 90 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்து இலங்கை வெற்றி பெற்றது.
திரிமனே 60 ரன்களுடனும், கேப்டன் மேத்யூஸ் 42 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. திரிமனே ஆட்டநாயகனாகவும், மலிங்கா தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.
முன்னதாக முதல் ஒருநாள் போட்டியில் டக்வெர்த் லீவிஸ் விதிப்படி 81 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
3-வது போட்டியில் இலங்கையை 67 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கிய இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 4-வது ஒருநாள் போட்டியில் இலங்கை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இப்போது 5-வது போட்டியிலும் இலங்கை வென்றுள்ளது.
‘‘மன்காட்” ரன் அவுட்: கிளார்க் ஆதரவு
“மன்காட்” ரன் அவுட் முறைக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆதரவு தெரிவித்துள்ளார். இங்கிலாந்து வீரர் பட்லரை, இலங்கையின் சேனநாயக “மன்காட்” முறையில் ரன்அவுட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த ரன் அவுட் முறைக்கு மைக்கேல் கிளார்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ரன்னர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன், பந்து வீசும் முன்பே கிரீசுக்கு வெளியே இருந்தபோது முதன் முதலாக ரன் அவுட் செய்தவர் இந்தியாவின் வினு மன்காட். 1947-ல் ஆஸ்திரேலியாவின் பில் பிரவுனை அவர் இந்தமுறையில் அவுட் செய்ததால் இந்த ரன் அவுட் முறை 'மன்காட்' என்று அழைக்கப்படுகிறது.
இது தொடர்பாக கிளார்க் மேலும் கூறியிருப்பது:
இங்கிலாந்து இலங்கை ஆட்டத்தில் மன்காட் ரன் அவுட் முறையில் ஒரு வீரரை ஆட்டமிழக்கச் செய்ததில் எந்தத் தவறும் இல்லை. பந்து வீசும் முன்பே கிரீசை விட்டு வெளியேறியது குறித்து முன்பே சில முறை எச்சரிக்கை விடுத்த பின்புதான் அவரை ஆட்டமிழக்கச் செய்துள்ளனர். இதற்கு கிரிக்கெட் விதிகளில் இடம் உள்ளது என்றார்.
பட்லரை திரும்ப அழைத்திருக்க வேண்டும் - ரணதுங்க
இங்கிலாந்து வீரர் பட்லரை இலங்கை வீரர்கள் ரன் அவுட் செய்த முறையில் தவறு இல்லை. ஆனால் அவர்கள் மீண்டும் அவரை திரும்ப அழைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் கிரிக்கெட் விளையாட்டில் அது ஒரு சிறப்பான முன்னுதாரணமாக இருந்திருக்கும். என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்க கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய சம்பவத்துக்காக இலங்கை கேப்டன் மேத்யூஸையோ அல்லது பந்து வீச்சாளர் சேனநாயகவையோ குறை சொல்ல முடியாது என்றும் ரணதுங்க கூறியுள்ளார்.
ஜெயசூர்யா கருத்து
இலங்கை வீரர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடியுள்ளார்கள். மே, ஜூன் மாதங்களில் இங்கிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினம். ஆனால் அந்த சாதனையை இலங்கை வீரர்கள் படைத்துள்ளனர்.
பட்லரை இலங்கை வீரர்கள் முன்பாகவே எச்சரிக்கைவில்லை என்று யாரும் கூற முடியாது. அப்படியிருக்கும்போது அந்த ரன் அவுட்டில் எந்த தவறும் இல்லை என்று இலங்கை அணியின் முன்னாள் தொடக்க வீரரும், இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவருமான சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT