Published : 02 Aug 2022 07:24 PM
Last Updated : 02 Aug 2022 07:24 PM
பர்மிங்காம்: நடப்பு காமன்வெல்த்தில் லான் பவுல்ஸ் விளையாட்டில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய மகளிர் அணி. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தியது.
லான் பவுன்ஸ் நால்வர் விளையாட்டில் தங்கத்தை இலக்கு சரியாக உருட்டிவிட்டு தட்டி தூக்கியுள்ளது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவை 17-10 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியுள்ளது இந்தியா. இதுதான் இந்திய இந்த விளையாட்டு பிரிவில் வெல்லும் முதல் தங்கம்.
மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணி தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது. முதல் 7 எண்ட் (சுற்று) வரை 8-2 என முன்னிலை வகித்தது இந்தியா. இருந்தாலும் அடுத்த நான்கு எண்டில் ஒரு புள்ளியை கூட இந்தியா பெறவில்லை. 11-வது எண்ட் முடிவில் இந்தியா 8-10 என பின்தங்கியது.
ஆனால் இந்திய வீராங்கனைகள் லவ்லி சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கி ஆகியோர் பதட்டம் கொள்ளாமல் அடுத்த 4 எண்டில் சூப்பராக விளையாடி இருந்தார்கள். ஒவ்வொரு எண்ட் முடிவிலும் புள்ளிகளை கூட்டிக் கொண்டே வந்தது இந்தியா. கடைசி எண்டில் 2 புள்ளிகளை பெற்றது இந்தியா.
HISTORY CREATED
1st Ever in Lawn Bowls at #CommonwealthGames
Women's Fours team win
அணியின் பின்புலம்:
லவ்லி சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கி ஆகியோர்தான் இந்திய அணியில் அங்கம் வகிக்கின்றனர். இவர்களில் இந்திய அணியில் லீடராக உள்ள லவ்லி, ஜார்கண்ட் மாநில காவல் துறையில் காவலராக உள்ளார். ரூபா, ராஞ்சியில் விளையாட்டுத் துறையில் பணி செய்து வருகிறார்.
பிங்கி, டெல்லியில் விளையாட்டு பயிற்சியாளராக உள்ளார். அசாம் மாநிலத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்த நயன்மோனி, மாநில வனத்துறையில் பணியாற்றி வருகிறார். இதுதான் இவர்கள் நால்வரின் பின்புலம். தேசிய கூட்டமைப்பு இவர்களது காமன்வெல்த் போட்டிகளுக்கான பயணச் செலவுகளை மட்டும்தான் கவனித்துக் கொள்கிறதாம். அதுதவிர மற்ற அனைத்து வெளிநாட்டுத் தொடர்களுக்கும் தேவையான செலவுகளை வீராங்கனைகள் பார்த்துக் கொள்வதாக தகவல்.
“எங்களை பொறுத்தவரையில் காமன்வெல்த் களம் எங்களுக்கு ஒலிம்பிக்கிற்கு சமம். ஏனெனில் லான் பவுன்ஸ் ஒலிம்பிக்கில் இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தோம். ஆனால், இந்த முறையில் பதக்கம் வென்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளோம். நிச்சயம் எங்களது இந்த முயற்சி எங்களுக்கு அங்கீகாரத்தை கொடுக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார் லவ்லி.
லவ்லியும், ரூபாவும் ராஞ்சியில் உள்ள ஆர்.கே ஆனந்த் பவுல்ஸ் கிரீன் ஸ்டேடியத்தில் பயிற்சி செய்வது வழக்கமாம்.
“இந்த விளையாட்டு பார்க்க எளிதாக இருந்தாலும் விளையாடுவது கொஞ்சம் கடினம். அனைத்து வயதினரும் இதனை விளையாடலாம். இந்த விளையாட்டுக்கான பவுல்ஸ் அனைத்தும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறதாம். அனைத்தும் இனி மாறும்” எனவும் லவ்லி தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு தோனி சாரை தெரியும்! - “ராஞ்சியில் உள்ள எங்களது பயிற்சியாளரை தோனி சார் நன்கு அறிவார். இரண்டு முறை எங்களை பார்க்க மைதானத்திற்கு வந்துள்ளார். எங்கள் மைதானத்திற்கு பக்கத்தில் உள்ள கோயிலுக்கு தோனி செல்வார். அப்போது எங்களையும் வந்து பார்ப்பார். இந்த விளையாட்டு குறித்து அவருடன் பேசியுள்ளோம். அவர் ஆஸ்திரேலியாவில் இந்த விளையாட்டை விளையாடி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்” என்கிறார் லவ்லி.
இனி எங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது... - “2009 முதல் அணியுடன் நான் பயணம் செய்து வருகிறேன். வீரார்களின் தாயாரை போன்ற பிணைப்பு எங்களுக்குள் உண்டு. இது நீண்ட பயணம். அவர்கள் எனது மகள்கள். இது எங்கள் குடும்பம். நாடு திரும்பியதும் எங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் நாங்கள் வென்று விட்டோம்” என பெருமிதத்துடன் சொல்கிறார் இந்திய அணியின் மேலாளர் அஞ்சு.
லான் பவுல்ஸ்: ரூல்ஸ் & கண்டிஷன்?
காமன்வெல்த் போட்டிகளின் தொடக்கமான 1930-களில் இருந்து லான் பவுல்ஸ் ஒரு விளையாட்டு பிரிவாக காமன்வெல்த்தில் இருந்து வருகிறது. இது மிகவும் பழமையான விளையாட்டுகளில் ஒன்றாம். இந்த விளையாட்டை பொதுவாக பார்க்கும் போது மிகவும் சாதாரணமாகதான் தெரியுமாம். இருந்தாலும் இதற்கென சில ரூல்ஸ் மற்றும் கண்டிஷன்களும் உள்ளன. அது இந்த விளையாட்டிற்கு த்ரில் சேர்க்கிறது.
இதன் பெயரை போலவே புல்வெளியில் அவுட்டோரில் விளையாடப்படும் விளையாட்டு இது. இதில் ‘தி ஜேக்’ என சொல்லப்படும் டார்கெட்டை நோக்கி பவுலை உருட்டி விட வேண்டும். இதுதான் இந்த விளையாட்டின் பேசிக் ரூல்.
ஒரு போட்டியில் இரண்டு அணிகள் விளையாடும். சிங்கிள்ஸ், பேர்ஸ், ட்ரிபிள்ஸ் மற்றும் ஃபோர்ஸ் என ஒற்றையர், இரட்டையர், மூவர், நால்வர் என நான்கு பார்மெட்டுகளில் இந்த விளையாட்டை விளையாடலாம்.
இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணி ஜேக்கை முதலில் உருட்டி விட வேண்டும். அதனை செய்தால் ஆட்டம் தொடங்கும். குறைந்தபட்சம் 23 மீட்டர் தூரம் ஜேக் சென்றிருக்க வேண்டும். அங்கிருந்து ஆட்டம் தொடங்குகிறது. அதாவது ஜேக் நிற்கின்ற இடத்தை ‘எண்ட்’ என சொல்கிறார்கள்.
அந்த எண்டை குறிவைத்து பவுல்களை வீரர்கள் உருட்டி (Roll) விட வேண்டும். ஒற்றையர் பிரிவு ஆட்டம் என்றால் ஒரு வீரர் அதிகபட்சமாக ஒரு எண்டில் பவுலை நான்கு முறை உருட்டி விடலாம். அதுவே அணியாக விளையாடும் போது ஒவ்வொரு வீரரும் தலா இரண்டு முறை பவுலை உருட்டலாம். அனைத்து வாய்ப்புகளும் நிறைவு பெற்ற பிறகு புள்ளிகள் கணக்கிடப்படுகிறது.
எந்த அணி பவுலை ஜேக்கிற்கு மிக அருகாமையில் நிலை நிறுத்துகிறதோ அந்த அணிக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறது. உதாரணமாக ‘பி’ அணி டார்கெட்டுக்கு அருகே நிறுத்தி உள்ள பவுல்களை காட்டிலும் ‘ஏ’ அணி டார்கெட்டுக்கு மிக அருகில் பவுலை நிறுத்தி இருந்தால் அந்த அணிக்கு புள்ளி வழங்கப்படும். ‘பி’ அணியின் குளோஸ் டார்கெட்டை காட்டிலும் ‘ஏ’ இரண்டு பவுல்களை நிலை நிறுத்தி இருந்தால் ‘ஏ’ அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்.
ஒற்றையர் பிரிவில் 21 புள்ளிகளை முதலில் பெறுகின்ற அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதுவே குழு போட்டியில் இந்த புள்ளிகளில் எண்ணிக்கை 18 என உள்ளது.
லான் பவுல்களின் எடை 1.5 கிலோ இருக்குமாம். இதில் ஒரு பக்கம் எடை கொஞ்சம் கூடுதலாக இருக்குமாம். அதன் மூலம் வீரர்கள் பந்தை சுலபமாக உருட்டி விடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT