Published : 02 Oct 2016 01:26 PM
Last Updated : 02 Oct 2016 01:26 PM
செஞ்சூரியனில் வெள்ளியன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் குவிண்டன் டி காக் 113 பந்துகளில் 178 ரன்கள் விளாசி தனி வீரனாக ஆஸி.யை வீழ்த்தியது சில சாதனைக்குரியதானது.
178 ரன்களில் 16 பவுண்டரிகள் 11 சிக்சர்கள் அடங்கும். அதாவது 130 ரன்கள் பவுண்டரிகளிலேயே!
அன்று ஆஸ்திரேலியா 25 ஓவர்களில் 192 ரன்களை விளாசினாலும் 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் அதன் பிறகு நின்று ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் 350 ரன்களுக்குச் சென்றிருக்க வேண்டிய ஸ்கோர் 294 ரன்களில் முடிந்த்து. ஆனால் 36.2 ஓவர்களில் டி காக் இதனை ஒன்றுமில்லாமல் செய்ததை நினைக்கும் போது 400 கூட தாங்கியிருக்க முடியாது என்றே தெரிகிறது. ரன் விகிதம் 8.11 என்பது குறிப்பிடத்தக்கது.
டி காக் விளாசிய 178 ரன்கள் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர். கேரி கர்ஸ்டனுக்கு அடுத்த ஸ்கோராக இது உள்ளது.
25 வயதுக்குட்பட்ட வீரர்கள் வரிசையில் இது 3-வது பெரிய ஸ்கோர்.
இலக்கைத் துரத்துவதில் 4-வது பெரிய ஒருநாள் விரட்டல் ஸ்கோராகும் இது. முன்னதாக ஷேன் வாட்சன் வங்கதேசத்துக்கு எதிராக 185 ரன்களையும், தோனி இலங்கைக்கு எதிராக 183 ரன்களையும் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி எடுத்த 183 ரன்களும் விரட்டலில் அதிகபட்ச ஸ்கோர்களாகும்.
செஞ்சூரியன் மைதானத்தில் டி காக்கின் சராசரி 95.25. இந்த மைதானத்தில் குவிண்டன் டி காக் 762 ரன்களை 9 இன்னிங்ஸ்களில் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள் 2 அரைசதங்கள். அவரது ஸ்ட்ரைக் ரேட் 105.24.
290 ரன்களுக்கு மேலான இலக்கைத் துரத்தும் போது ஓவருக்கு 8 ரன்களுக்கு மேலாக அடித்து நொறுக்குவது இது 6-வது முறையாகும். தென் ஆப்பிரிக்காவுக்கு இது 2-வது முறை. இந்தியா, இலங்கை ஆகியவை ஏற்கெனவே இதனை இருமுறை சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டி காக் அன்று 74 பந்துகளில் சதம் விளாசினார். ஏ.பி.டிவில்லியர்ஸ், மார்க் பவுச்சர் மட்டுமே இதற்கு முன்பு குறைந்த பந்துகளில் சதம் கண்டனர். டிவில்லியர்ஸ் குறைந்த பந்துகளில் 7 முறை சதம் கண்டுள்ளார்.
தனது 11-வது சதத்தை 65வது ஒருநாள் போட்டியில் எடுத்துள்ளார் டிகாக், இதற்கு முன்னர் ஹஷிம் ஆம்லா மட்டுமே 64 இன்னிங்ஸ்களில் 11 சதங்களை எடுத்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT