Published : 21 Oct 2016 08:06 PM
Last Updated : 21 Oct 2016 08:06 PM

இங்கிலாந்துக்கு சவால் அளிக்கும் வங்கதேசம்- 221/5

சிட்டகாங்கில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 293 ரன்களுக்கு எதிராக வங்கதேசம் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து பவுலிங்கை நன்றாக கணித்து ஆடிய தமிம் இக்பால் (78) மற்றும் முஷ்பிகுர் ரஹிம் (48) ஆகியோரது இன்னிங்ஸ்களினால் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைக் கடந்து சென்று முன்னிலை பெறும் வாய்ப்பை வங்கதேசம் பெற்றுள்ளது. இதற்கு உறுதுணையாக ஷாகிப் அல் ஹசன் 31 ரன்களுடன் களத்தில் உள்ளார், இவருடன் ஷைபுல் இஸ்லாம் உள்ளார்.

முன்னதாக ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர், அறிமுக வீரர் மெஹதி ஹசன் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதிக்க இங்கிலாந்து 293 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் முடங்கியது.

2-ம் நாளான இன்று 258/7 என்று இங்கிலாந்து தொடங்கிய போது முதல் பந்திலேயே கிறிஸ் வொக்ஸ் (36) தைஜுல் இஸ்லாம் பந்தில் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடில் ரஷித் (26), பிராட் (13) ஆகியோர் இங்கிலாந்தை 300 ரன்களுக்கு இட்டுச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடில் ரஷித், ஷார்ட் கவரில் சபீர் ரஹ்மானின் நல்ல கேட்சிற்கு வெளியேறி தைஜுலுக்கு விக்கெட்டை அளித்தார். பிராட் 13 ரன்களில் மெஹதி ஹசனிடம் வீழ்ந்தார்.

இதன் மூலம் வங்கதேசம் உணவு இடைவேளைக்கு முன் ஒரு மணி நேரம் பேட் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பிராடுடன், இங்கிலாந்தின் ஆஃப் ஸ்பின்னர் பாட்டீ என்பவர் பயன்படுத்தப்பட்டார். 13 ஓவர்கள் வரை இம்ருல் கயேஸும், தமிமும் அருமையாக ஆடினர், உணவு இடைவேளைக்கு முன்னதாக மொயின் அலி வீசிய அருமையான பந்தில் பவுல்டு ஆனார் இம்ருல் கயேஸ் (21). 3 பந்துகள் கழித்து மொமினுல் ஹக், ஜானி பேர்ஸ்டோ கிளவ்வில் பட்டு ஸ்டோக்ஸிடம் கல்லியில் கேட்ச் ஆக வெளியேறினார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு தமிம் இக்பால், மஹமுதுல்லா எச்சரிக்கையுடன் ஆடினர். இங்கிலாந்து நிறைய தளர்வான பந்துகளை வீச தமிம் அதனை நன்றாகப் பயன் படுத்திக் கொண்டார். 19-வது டெஸ்ட் அரைசதத்தை எட்டினார் தமிம். ஒரு முறை ஜோ ரூட் ஸ்லிப்பில் தமீமுக்கு ஒரு கையில் அதிர்ச்சிகரமான கேட்ச் ஒன்றை பிடித்தார், நடுவர் அவுட் கொடுக்க, தமிம் ரிவியூ செய்தார், பந்து கிளவ்வில் படவில்லை என்று தெரிந்தது.

மஹமுதுல்லா 38 ரன்கள் எடுத்து ஆடி வந்த போது ரஷித் பந்தை முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகும் இங்கிலாந்து எதிர்பார்த்த சரிவு ஏற்படவில்லை.

முஷ்பிகுர் ரஹிம், தமிம் இணைந்து சீரான முறையில் ரன்களை எடுக்கத் தொடங்கினார். ஸ்கோர் 164 ரன்களை எட்டிய போது 78 ரன்கள் எடுத்த தமிம் இக்பால் பாட்டீயின் சற்றே பிளாட்டான, விரைவு பந்துக்கு எட்ஜ் ஆகி பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்தார். முஷ்பிகுர்-ஷாகிப் அல் ஹசன் ஜோடி இங்கிலாந்து ஸ்பின் பந்து வீச்சு அசரவில்லை. தளர்வான பந்துகளில் ரன்களைக் குவிப்பதும் தொடர்ந்தது, இருவரும் இணைந்து 58 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த நிலையில் 77 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து நன்றாக, சுறுசுறுப்பாக ஆடி வந்த முஷ்பிகுர் ரஹிம் ஸ்டோக்ஸ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஷாகிப் அல் ஹசன் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். நாளை 3-ம் நாளில் இவர் மற்றும் மீதமுள்ளவர்கள் சேர்ந்து இங்கிலாந்து ஸ்கோரைக் கடந்து சென்று அரிய முன்னிலை பெறுகின்றனரா என்பதைப் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x