Published : 01 Aug 2022 05:54 PM
Last Updated : 01 Aug 2022 05:54 PM

CWG 2022 | லான் பவுல்ஸில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணிக்கு உறுதியானது பதக்கம்: விளையாடும் முறை எப்படி?

நடப்பு காமன்வெல்த்தில் லான் பவுல்ஸ் விளையாட்டு பிரிவில் பதக்கத்தை உறுதி செய்துள்ளது இந்திய மகளிர் அணி. இந்த விளையாட்டின் நால்வர் பார்மெட் மகளிர் அணி அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியா.

இன்று நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் 1-6 என்ற நிலையில் பின்தங்கி இருந்தது. போட்டியில் முடிவில் 16-13 என்ற புள்ளிகள் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா. இதன் மூலம் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்திய மகளிர் நால்வர் அணி. இதுதான் இந்திய மகளிர் அணி (நால்வர் பார்மெட்) விளையாட உள்ள முதல் இறுதிப் போட்டி.

அரையிறுதியில் ஐந்தாவது எண்டில் (சுற்று) இருந்து இந்திய அணி புள்ளிகளை பெற தொடங்கியது. இறுதி வரை இரு அணிகளும் மாறி மாறி முன்னிலை வகித்தன. இருப்பினும் கடைசி மூன்று எண்டில் உலகத்தின் நம்பர் 2 அணியாக உள்ள நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளியது இந்தியா. அதன் மூலம் வெற்றியும், பதக்கமும் இப்போது உறுதியாகி உள்ளது.

இந்திய வீராங்கனைகள் லவ்லி சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கி ஆகியோர் இந்தியாவிற்காக விளையாடி இந்த வெற்றியை பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா வெள்ளி வெல்வது உறுதியாகி உள்ளது. இந்த விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைக்க போகும் முதல் பதக்கம் இது என சொல்லப்படுகிறது. நாளை மாலை 04.15 மணி அளவில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

லான் பவுல்ஸ்: ரூல்ஸ் & கண்டிஷன்?

  • காமன்வெல்த் போட்டிகளின் தொடக்கமான 1930-களில் இருந்து லான் பவுல்ஸ் ஒரு விளையாட்டு பிரிவாக காமன்வெல்த்தில் இருந்து வருகிறது. இது மிகவும் பழமையான விளையாட்டுகளில் ஒன்றாம். இந்த விளையாட்டை பொதுவாக பார்க்கும் போது மிகவும் சாதாரணமாகதான் தெரியுமாம். இருந்தாலும் இதற்கென சில ரூல்ஸ் மற்றும் கண்டிஷன்களும் உள்ளன. அது இந்த விளையாட்டிற்கு த்ரில் சேர்க்கிறது.
  • இதன் பெயரை போலவே புல்வெளியில் அவுட்டோரில் விளையாடப்படும் விளையாட்டு இது. இதில் ‘தி ஜேக்’ என சொல்லப்படும் டார்கெட்டை நோக்கி பவுலை உருட்டி விட வேண்டும். இதுதான் இந்த விளையாட்டின் பேசிக் ரூல்.
  • ஒரு போட்டியில் இரண்டு அணிகள் விளையாடும். சிங்கிள்ஸ், பேர்ஸ், ட்ரிபிள்ஸ் மற்றும் ஃபோர்ஸ் என ஒற்றையர், இரட்டையர், மூவர், நால்வர் என நான்கு பார்மெட்டுகளில் இந்த விளையாட்டை விளையாடலாம்.
  • இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணி ஜேக்கை முதலில் உருட்டி விட வேண்டும். அதனை செய்தால் ஆட்டம் தொடங்கும். குறைந்தபட்சம் 23 மீட்டர் தூரம் ஜேக் சென்றிருக்க வேண்டும். அங்கிருந்து ஆட்டம் தொடங்குகிறது. அதாவது ஜேக் நிற்கின்ற இடத்தை ‘எண்ட்’ என சொல்கிறார்கள்.
  • அந்த எண்டை குறிவைத்து பவுல்களை வீரர்கள் உருட்டி (Roll) விட வேண்டும். ஒற்றையர் பிரிவு ஆட்டம் என்றால் ஒரு வீரர் அதிகபட்சமாக ஒரு எண்டில் பவுலை நான்கு முறை உருட்டி விடலாம். அதுவே அணியாக விளையாடும் போது ஒவ்வொரு வீரரும் தலா இரண்டு முறை பவுலை உருட்டலாம். அனைத்து வாய்ப்புகளும் நிறைவு பெற்ற பிறகு புள்ளிகள் கணக்கிடப்படுகிறது.
  • எந்த அணி பவுலை ஜேக்கிற்கு மிக அருகாமையில் நிலை நிறுத்துகிறதோ அந்த அணிக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறது. உதாரணமாக ‘பி’ அணி டார்கெட்டுக்கு அருகே நிறுத்தி உள்ள பவுல்களை காட்டிலும் ‘ஏ’ அணி டார்கெட்டுக்கு மிக அருகில் பவுலை நிறுத்தி இருந்தால் அந்த அணிக்கு புள்ளி வழங்கப்படும். ‘பி’ அணியின் குளோஸ் டார்கெட்டை காட்டிலும் ‘ஏ’ இரண்டு பவுல்களை நிலை நிறுத்தி இருந்தால் ‘ஏ’ அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்.
  • ஒற்றையர் பிரிவில் 21 புள்ளிகளை முதலில் பெறுகின்ற அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதுவே குழு போட்டியில் இந்த புள்ளிகளில் எண்ணிக்கை 18 என உள்ளது.
  • லான் பவுல்களின் எடை 1.5 கிலோ இருக்குமாம். இதில் ஒரு பக்கம் எடை கொஞ்சம் கூடுதலாக இருக்குமாம். அதன் மூலம் வீரர்கள் பந்தை சுலபமாக உருட்டி விடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

— Birmingham 2022 (@birminghamcg22) July 12, 2022

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x