Published : 17 Oct 2016 03:23 PM
Last Updated : 17 Oct 2016 03:23 PM
நியூஸிலாந்துக்கு எதிராக அஸ்வின் வீசியதைப் பார்க்கும் போது அஸ்வின் சுழற்பந்து வீச்சு என்ற பயங்கரம் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு காத்திருக்கிறது என்றே கூற வேண்டியுள்ளது என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார்.
ஈஎஸ்பிஎன்-கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:
ஆஸ்திரேலியாவுக்கு ஸ்பின் பந்து வீச்சை எதிர்கொள்வது விருப்பமில்லாமல் போயுள்ளது என்பது ஒரு சாபமாகவே பரவலாகியுள்ளது. நியூஸிலாந்துக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் வீசியதைப் பார்க்கும் போது இந்தியா செல்லும் ஆஸ்திரேலிய அணியை நினைத்தால் அப்படித்தான் தோன்றுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் நிறைய தொந்தரவுகளை கொடுத்திருக்கிறார் என்றாலும் கூட நியூஸிலாந்துக்கு எதிராக அவர் ஏற்படுத்திய சேதம் அளவுக்கு ஏற்படுத்தியதில்லை. ஆனால் இந்தூரில் அவர் வீசிய பந்து வீச்சை வைத்துப் பார்க்கும் போது ஆஸ்திரேலியாவுக்கும் அவர் சிம்ம சொப்பனமாக திகழ்வார் என்றே தெரிகிறது.
ஆஸ்திரேலியாவில்தான் அஸ்வின் ஸ்பின் பந்துவீச்சிற்குரிய பாடத்தைக் கற்றார். முன்பாக அவர் அடிக்கடி விதம் விதமான பந்துகளை வீசுவதில் நாட்டம் செலுத்துவார் இதனால் அவரது லெந்த்தை எளிதில் கணிக்க முடிந்தது. ஆனால் பிறகு தனது ஆஃப் ஸ்பின் பந்துகளை வீசுவதில் அவர் கவனம் செலுத்தத் தொடங்கினார். சோதனை முயற்சிகளை குறைத்துக் கொண்டு சாதுரியமாக பயன்படுத்தக் கற்றுக் கொண்டார்.
இதனையடுத்து 2012-13 தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியாவில் ஆடிய போது அஸ்வின் தன்னம்பிக்கைமிக்க பவுலர் ஆனார். ஸ்பின்னர்களுக்கேயுரிய பிரபை அவரிடமும் ஏற்பட்டது. மேலும் நடுக்களத்தில் ரன்கள் எடுப்பதிலும் சீராக அவர் திகழ்வதால் இந்தியாவின் ரெகுலர் மேட்ச் வின்னராக அவர் இனி திகழ்வார்.
எனவே இன்னும் சில தினங்களில் அவரை, ரங்கனா ஹெராத்தினால் வேதனை ஏற்படுத்தப்பட்ட ஆஸ்த்ரேலிய அணி எதிர்கொள்கிறது. ஹெராத்தின் வெற்றியைக் கண்டு ரவீந்திர ஜடேஜா கனவில் மிதந்து கொண்டிருப்பார்.
நிச்சயம் அஸ்வின், ஜடேஜா ஏற்படுத்தும் சேதம் 1956-ம் ஆண்டு ஜிம் லேக்கர், டோனி லாக் ஏற்படுத்தியதன் நினைவுகளைக் கிளறும் என்று எதிர்பார்க்கிறேன்.
அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் பிரமாதமாக வீசி 1967-68 தொடரில் பிரசன்னா 25 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது என் நினைவில் உள்ளது. அதற்கு அடுத்த 1969-70 தொடரிலும் பிரசன்னா 5 டெஸ்ட் போட்டிகளில் 26 விக்கெட்டுகளைக் கைப்பறினார். அதாவது ஆஸ்திரேலிய பிட்ச்களில் மணிக்கட்டைப் பயன்படுத்தி வீசும் ஸ்பின்னர்களுக்கே சாதகம் அதிகம், ஆனால் விரல்களில் ஸ்பின் செய்த பிரசன்னா ஆஸ்திரேலிய பிட்ச்களில் சாதித்தது மிகப்பெரிய சாதனைக்குரியதும் தனித்துவமிக்கதுமாகும். 2000-01-ல் ஹர்பஜன் ஆஸ்திரேலிய அணிக்கு டொர்னாடோ போன்ற சீரழிவை ஏற்படுத்தினார்.
எனவே லேக்கர், பிரசன்னா, ஹர்பஜன் ஏற்படுத்திய அதே வலியை ஏற்கெனவே அஸ்வின் ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படுத்தியுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக அஸ்வின் வீசிய பந்துவீச்சு ஸ்டீவ் ஸ்மித் அணியினருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
இவ்வாறு எழுதியுள்ளார் இயன் சாப்பல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT