Published : 29 Jul 2022 01:46 PM
Last Updated : 29 Jul 2022 01:46 PM
மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. இதில் சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,500 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு தினமும் விருந்து வழங்குவது போன்று விதவிதான வகை உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 77 மெனுக்கள் உருவாக்கப்பட்டு அதில் 53 தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த 53 மெனுவில் 700-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது.
அதிலும் முக்கியமான உணவுகள் மீண்டும் மீண்டும் ஒரே வகையில் வழங்கப்படக்கூடாது என கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளதாம்.
ஒரு நாள் பட்டர் சிக்கன் வழங்கப்பட்டால் அடுத்த நாள் அந்த வகை பரிமாறப்படாது. இதேபோன்றுதான் சைவ உணவு வகைகளுக்கும்.
இந்திய, ஆசிய, ஐரோப்பிய உணவு வகைளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சூப், பழச்சாறு, ஸ்டார்டர்கள், சாலட்ஸ், இனிப்பு, கீரை, பாஸ்டா, சீஸ் என பல்வேறு வகைகள் நீண்டு கொண்டே செல்வது சற்று வியக்க வைக்கிறது.
கருத்துப் பகிர்வுகள்:
“ஒலிம்பியாட் போட்டிகளை நடத்த அனைத்து உதவிகளையும் மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுத்தன. முதலில் இந்த போட்டிக்கு ரூ.75 கோடி செலவாகும் என மதிப்பிட்டோம். ஆனால் இது தற்போது 100 கோடிக்கு மேல் சென்றிருக்கும். இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி.” - பரத்சிங் சவுஹான், ஒலிம்பியாட் இயக்குநர்
“செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக கடந்த 3 மாதங்களாக கடிகார முள் போன்று ஓடிக்கொண்டே இருந்தோம். இந்திய சதுரங்கத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று நான் நினைக்கிறேன். 2 வார காலத்தில் குழந்தை பெற்றெடுக்க உள்ள ஹரிகா இந்த போட்டியில் கலந்து கொள்ள காட்டும் தீவிரத்தை போன்று தான் இந்த போட்டியை நடத்த நாங்கள் காட்டினோம்.” - அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர், சஞ்ஜய் கபூர்
“இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பியாட் என்பது சதுரங்கத்தின் கொண்டாட்டமாகும். லத்தீன் மொழியில் “நாம் ஒரே குடும்பம்” என்றஎங்கள் பொன்மொழியான 'ஜென்ஸ் உனாசுமஸ்' படி இந்த நிகழ்வு ஒன்றுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவரான ஏ.கே.கபூர் 4 மாதங்களில் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து முடித்தது பாராட்டுக்குரியது.” - சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) தலைவர், அர்காடி டிவோர்கோவிச்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT