Published : 29 Jul 2022 12:56 PM
Last Updated : 29 Jul 2022 12:56 PM
மகளிர் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு சொந்த மண்ணில் இம்முறை நிறைவேறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஏ அணிக்கு போட்டித் தரவரிசையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
சீனா, ரஷ்யா அணிகள் இல்லாததால் வலுவான களத்தை அமைத்து இந்திய அணி கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டும். ஒரு புறம் சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு சாதமாக இருந்தாலும் பெருகிவரும் எதிர்பார்ப்புகளைச் சமாளிப்பது சவாலாக இருக்கக்கூடும்.
வீரர்களைச் சுற்றியுள்ள பெரும்பாலான உரையாடல்களில் பதக்கங்களைப் பற்றிய பேச்சு ஆதிக்கம் செலுத்துகிறது. இதை கையாள்வதில் பயிற்சியாளர்களான அபிஜித் குண்டே மற்றும் ஸ்வப்னில் தோபடே ஆகியோர் பெரும் பங்கு வகிக்கக்கூடும்.
இந்திய ஏ அணியில் கோனேரு ஹம்பி, டி. ஹரிகா, ஆர்.வைஷாலி, தானியா சச்தேவ் மற்றும் பக்தி குல்கர்னி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கோனேரு ஹம்பி அணியில் இருப்பது பெரிய பலம். நிறைமாத கர்ப்பிணி யாக இருப்பதால் ஹரிகா போட்டியின் தினத்தில் எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பதை பொறுத்து அவர் விளையாடுவது குறித்து முடிவு செய்யக்கூடும்.
முதன் முறையாக களமிறங்கும் வைஷாலி தனது ஆட்டத்தில் அற்புதமான பரிமாணத்தை கொண்டவராக திகழ்கிறார். ஏற்கெனவே பதக்கம் வென்றுள்ள தானியா சச்தேவ், 7-வது முறையாக ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் அவர், போர்டுகளில் நிகழும் சவால்களை கையாள்வதில் சிறந்த நிபுணத்துவத்தையும், அனுபவத்தையும் கொண்டவர். பக்தி குல்கர்னியின் பார்ம் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.
இந்திய பி அணிக்கு போட்டித் தரவரிசையில் 12-வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களான வந்திகா அகர்வால் மற்றும் தேசிய சாம்பியனான திவ்யா தேஷ்முக் ஆகியோருடன் சிறந்த அனுபவமுள்ள பத்மினி ரவுத், சவுமியா சுவாமிநாதன் மற்றும் மேரிஅன் கோம்ஸ் உள்ளனர். பி அணி மீது அதிக குறைந்த அளவிலான எதிர்பார்ப்பே உள்ளதால் அழுத்தங்கள் இல்லாமல் தொடக்க சுற்றுகளில் வெற்றிகளை குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு உக்ரைன், ஜார்ஜியா அணிகள் சவால் தர ஆயத்தமாக உள்ளது. முன்னாள் மகளிர் உலக சாம்பியனான மரியா முசிச்சுக் தலைமையில், உக்ரைன் 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஒலிம்பியாட் போட்டியிலும் பதக்கம் வென்றுள்ளது. 2006-ல் சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி கடந்த 2018-ல் டை பிரேக்கரில் சீனாவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
மரியாவின் சகோதரியான அனா அணியில் இரண்டாவது வலிமையான வீராங்கனையாக திகழ்கிறார். அனா, மகளிர் செஸ் ரேட்டிங்கில் 2600 புள்ளிகளை எட்டிய நான்காவது வீராங்கனை ஆவார். மேலும் முன்னாள் உலக சாம்பியன்ஷிப் ரன்னர்-அப் மற்றும் உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பட்டங்களை வென்றவர்.
அனா உஷெனினா அணியில் உள்ள மற்றொரு முன்னாள் உலக சாம்பியன் ஆவார். மற்ற இரண்டு வீராங்கனைகளும் ரேட்டிங்கில் 2400-க்கு மேல் புள்ளிகளை கொண்டுள்ளனர். இதன் காரணமாகவே உக்ரைன் அணி கடும் போட்டி அளிக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது.
4 முறை வெற்றியாளரான ஜார்ஜியா வீரர்களின் சராசரி மதிப்பீடுகளில் உக்ரைனை விட மூன்று புள்ளிகள் பின்தங்கி உள்ளது. தங்கள் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஜார்ஜியாவும் ஒன்றாக கருதப்படுகிறது. தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நானா ஜாக்னிட்ஸே, லீலா ஜாவகிஷ்விலி, நினோ பாட்சியாஷ்விலி மற்றும் மெரி அரபிட்ஸே ஆகியோரது ரேட்டிங் புள்ளிகள் 2531 மற்றும் 2426-க்கு இடையி லானதாக உள்ளது. இதுவே அந்த அணியின் செயல்திறன்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
போட்டித் தரவரிசையில் முதல் 3 இடங்களில் உள்ள அணிகளை சோதிக்கக்கூடிய அணியாக இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய கஜகஸ்தான் திகழக்கூடும். 4-வது இடத்தில் உள்ள கஜகஸ்தான் அணி 2017-ம் ஆண்டு உலக ஜூனியர் மகளிர் சாம்பியனான ஜான்சயா அப்துல்மாலிக் (வயது 22), 2016-ம் ஆண்டு உலக ஜூனியர் மகளிர் பிரிவில் பட்டம் வென்ற தினரா சதுகாசோவா (25) மற்றும் நடப்பு உலக மகளிர் பிளிட்ஸ் சாம்பியனான பிபிசரா அஸ்ஸௌபயேவா (18) ஆகியோரை கொண்டு சவால் அளிக்கக்கூடியதாக உள்ளது. போலந்து, பிரான்ஸ், அமெரிக்கா, அஜர் பைஜான், பல்கேரியா ஆகிய அணிகளும் சவால் தரக்கூடியதாகவே திகழ்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT