Published : 27 Jul 2022 10:05 PM
Last Updated : 27 Jul 2022 10:05 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்னும் 30 அல்லது 35 சதங்களை பதிவு செய்வார் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். அதோடு கோலியை விமர்சிப்பவர்களை கடுமையாக சாடியும் உள்ளார் அவர்.
மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது.
டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து ஃபார்மெட்டிலும் எதிரணியின் பந்துவீச்சை விரட்டி விரட்டி வெளுத்து வாங்கும் வல்லமை கொண்டவர் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 23,726 ரன்களை எடுத்துள்ளார்.
இருந்தும் இப்போது மோசமான ஃபார்ம் காரணமாக மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். அவருக்கு ஆதரவாகவும், அவரது ஃபார்மை விமர்சித்தும் வருகின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள். அதில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார் உத்தப்பா.
“கோலி சர்வதேச கிரிக்கெட் களத்தில் அபார ரன் குவிப்பில் ஈடுபட்ட போதும், சதங்களுக்கு மேல் சதங்களாக குவித்து வந்த போதும் அவர் இப்படி விளையாட வேண்டும், அப்படி விளையாட வேண்டும் என யாருமே சொல்லவில்லை. அதனால் இப்போது அவர் எப்படி விளையாட வேண்டும் என சொல்வதற்கு யாருக்குமே உரிமை இல்லை என நான் நினைக்கிறேன்.
அவரது திறனால் 70 சதங்களை பதிவு செய்துள்ளார். எப்படியும் அவர் ஓய்வு பெறுவதற்குள் மேலும் 30 அல்லது 35 சதங்களை அதே திறனை கொண்டு பதிவு செய்துவிடுவார் என நம்புகிறேன். அவரை அவர் போக்கில் விட்டால் போதும்” என உத்தப்பா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT