Published : 25 Jul 2022 03:44 PM
Last Updated : 25 Jul 2022 03:44 PM
சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், டிஸ்னி ஸ்டார் ஒப்பந்தத்தை கிரிக்கெட் ஆஸ்திரேலியா பெற முக்கியப் பங்கு ஆற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020 மற்றும் 2021 ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் அவர் விளையாடிய அபார இன்னிங்ஸ் தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
24 வயதான ரிஷப் பந்த், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து ஃபார்மெட்டிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது அபார இன்னிங்ஸ்களில் ஒன்று 2021-இல் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான காபா டெஸ்ட் போட்டி.
காபா மைதானம் ஆஸ்திரேலிய அணியின் கோட்டை. அந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி பல டெஸ்ட் போட்டிகளில் வாகை சூடியுள்ளது. அப்படிப்பட்ட மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை அந்தப் போட்டியில் வீழ்த்தி இருந்தது இந்தியா. அதற்கு முக்கிய காரணம் பந்த் விளையாடிய ஆட்டம். இரண்டாவது இன்னிங்ஸில் 89 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் அணியை வெற்றி பெற செய்திருப்பார். அது கிரிக்கெட் ரசிகர்களின் பலரது நெஞ்சத்தை கவர்ந்திருந்தது.
இப்போது அந்த இன்னிங்ஸ் தான் டிஸ்னி ஸ்டார் நிறுவனம், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள பிரதான காரணம் என சொல்லப்படுகிறது. சுமார் 360 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் டிஸ்னி ஸ்டார் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ளது.
முன்னதாக, 2006-2013 காலகட்டத்தில் ஒளிபரப்பு உரிமத்தை வெறும் 275 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா வேறொரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததாக தெரிகிறது. இப்போது அது அப்படியே பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இதனை ஸ்டார் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் மற்றும் மகளிர் பிக் பேஷ் லீக் தொடர்களுக்கான ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. இப்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளுக்கான உரிமத்தையும் ஸ்டார் பெற்றுள்ளது. 2023 - 27-க்கான ஐபிஎல் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தையும் ஸ்டார் 23,575 கோடி ரூபாய் செலுத்தி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT