Published : 25 Jul 2022 05:13 AM
Last Updated : 25 Jul 2022 05:13 AM
போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் தொடரை இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இப்போது பலப்பரீட்சை செய்து வருகின்றன. இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. 49.4 பந்துகளில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்தியா. தவான் 13 ரன்களும், கில் 43 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 9 ரன்களும் எடுத்து அவுட்டாகி இருந்தனர். அதனால் 79 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.
இருந்தாலும் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சனும் இணைந்து 99 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷ்ரேயஸ் 71 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். சாம்சன், 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து தீபக் ஹூடா மற்றும் அக்சர் படேல் 51 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஹூடா 33 ரன்களில் அவுட்டானார்.
அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டது. மறுபக்கம் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்தியா. அக்சர் இறுதிவரை பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற செய்தார். கடைசி ஓவரின் நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதியை செய்தார் அவர். 35 பந்துகளில் 64 ரன்களை விளாசி இருந்தார். 3 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அவரது இன்னிங்ஸில் அடங்கும். இடையில் தாக்கூர் மற்றும் ஆவேஷ் கான் தங்களது விக்கெட்டுகளை இழந்திருந்தார்.
ஆட்டநாயகன் விருதை அக்சர் படேல் வென்றார். இந்த போட்டியில் அவர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி எஞ்சியிருக்க தொடரை கைப்பற்றியுள்ளது.
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் சதம் பதிவு செய்தார். 115 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கேப்டன் பூரன் 74 ரன்கள் எடுத்தார். கெய்ல் மேயர்ஸ் 39 ரன்களும், ப்ரூக்ஸ் 35 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இந்திய அணி சார்பில் தாக்கூர் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். சஹால், அக்சர் படேல் மற்றும் தீபக் ஹூடா தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.
.@akshar2026 played a sensational knock & bagged the Player of the Match award as #TeamIndia beat West Indies in the 2nd ODI to take an unassailable lead in the series. #WIvIND
Scorecard https://t.co/EbX5JUciYM pic.twitter.com/4U9Ugah7vL— BCCI (@BCCI) July 24, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT