Published : 19 Jul 2022 09:07 PM
Last Updated : 19 Jul 2022 09:07 PM

“வருங்கால கேப்டனாக ரிஷப் பந்த் வரலாம்” - அருண் லால் அடுக்கும் காரணங்கள்

ரிஷப் பந்த்.

கொல்கத்தா: ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் வருங்கால கேப்டனாக ரிஷப் பந்த் வரலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அருண் லால் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை பந்த் வெளிப்படுத்தி வரும் நிலையில், இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்டிலும் தவிர்க்க முடியாத வீரராக உருவாகி உள்ளார். நடப்பு ஆண்டில் மட்டும் சர்வதேச கிரிக்கெட் களத்தில் மொத்தம் 988 ரன்கள் சேர்த்துள்ளார் பந்த். இதில் மூன்று சதம் மற்றும் மூன்று அரை சதம் அடங்கும். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா வெல்ல கடைசி போட்டியில் மேட்ச் வின்னராக ஜொலித்தார் பந்த்.

இந்நிலையில், பந்த் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால கேப்டனாக வரலாம் என அருண் லால் தெரிவித்துள்ளார். அதற்கான காரணங்களையும் அவர் எடுத்து வைத்துள்ளார்.

"ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் வருங்கால கேப்டனாக ரிஷப் பந்த் வரலாம். ஏனெனில் ஒரு அணியின் தலைவர் இப்படி தான் இருக்க வேண்டும் என நான் நினைப்பது உண்டு. அதாவது அணியின் டாப் 3 வீரர்களில் ஒருவர் என்ற தகுதியை பெற்றவராக கேப்டன் இருக்க வேண்டும். பந்த் எந்தச் சூழலிலும் தனது இயல்பான ஆட்டத்தை அஞ்சாமல் விளையாடுபவர். ஆட்டத்தில் உள்ள அழுத்தத்தை திறம்பட கையாள்பவர். சரிவில் உள்ள அணியை மீட்கும் வல்லமை படைத்தவர். அப்படி ஒரு வீரர் தான் சிறந்த கேப்டனாகவும் இருக்க முடியும். பந்த் போன்ற அதிரடி வீரர் ஒருவர் அணியை வழி நடத்துவது இந்தியாவுக்கு சாதகம்.

அவரது சதங்கள் குறித்து நான் பேசவில்லை. ஆனால் அவர் பதிவு செய்துள்ள சதங்கள் அனைத்தும் நெருக்கடியில் வந்தவை. எதிரணி வசமிருந்த வெற்றியை தட்டிப் பறித்து வந்தவை. முக்கியமாக அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் தன்னை பொருத்தமான வீரர் என அவர் நிரூபித்துள்ளார்" என அருண் லால் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக பந்த் செயல்பட்டு வருகிறார். இந்திய அணிக்கு அறிமுகமாவதற்கு முன்னரே ரஞ்சிக் கோப்பை தொடரில் டெல்லி அணியை வழிநடத்தி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x