Published : 19 Jul 2022 06:38 PM
Last Updated : 19 Jul 2022 06:38 PM
புது டெல்லி: விராட் கோலி போன்ற திறமையான வீரரை ஒருபோதும் தவிர்க்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். கோலி மோசமான ஃபார்மில் விளையாடி வரும் சூழலில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு அளிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இருந்தாலும் இது ஓய்வா அல்லது அவர் அணியில் இருந்து டிராப் செய்யப்பட்டுள்ளாரா என்ற விவாதம் இப்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், கோலிக்கு ஆதரவாக பேசி உள்ளார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் கோலி உடன் இணைந்து விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"கடந்த காலங்களில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் ரன் குவிப்பதை அனுபவித்த வீரர். இப்போது அவருக்கு சிறந்த ஓய்வு கிடைத்துள்ளது. நிச்சயம் இதன் மூலம் தன்னை ரீசார்ஜ் செய்து கொண்டு, அவர் கம்பேக் கொடுப்பார். மீண்டும் சிறப்பாக களத்தில் அவர் செயல்படுவார் என நம்புகிறேன். அவரைப் போன்ற திறமையான வீரரை ஒருபோதும் தவிர்க்க முடியாது" என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மேலும், “அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு மத்தியில் எப்போதுமே ஓர் ஆரோக்கியமான போட்டி இருக்கும். அதுதான் இந்திய கிரிக்கெட்டின் அழகு. இந்தப் போட்டி அதன் ஒரு பகுதி. அணியில் கம்பேக் கொடுக்க கடுமையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நாங்கள் இப்போது டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு விளையாடி வருகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT