Published : 14 May 2016 10:17 AM
Last Updated : 14 May 2016 10:17 AM

ஸ்டாய்னிஸ் பந்துவீச்சு, விஜய், சஹா அரைசதங்களினால் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்

விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற 43-வது ஐபிஎல் போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை முரளி விஜய் கேப்டனான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தியது.

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சந்தீப் சர்மா, மோஹித் சர்மா, ஸ்டாய்னிஸ் ஆகியோரது பந்து வீச்சுக்கு எதிராக 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்களை மட்டும் எடுத்தது. தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் அணி விஜய், சஹா ஆகியோரது அரைசதங்களினால் 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக 4 ஓவர்களில் 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஸ்டாய்னிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

பிட்சின் தரம் மோசமாக இருந்து. பந்துகள் மெதுவாகவும் தாழ்வாகவும் வர மும்பை பேட்ஸ்மென்களினால் தாக்குதல் ஆட்டம் ஆட முடியவில்லை. ஆனால் கிங்ஸ் லெவன் பந்துவீச்சும் துல்லியமாக அமைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியினால் ரன்களை ஒன்று இரண்டு என்று சேர்க்க முடியவில்லை சக்தி வாய்ந்த ஷாட்களே ரன்களை பெற்று தரும் பிட்சில் அந்த அணி 8 சிச்கர்களை அடித்து 5 பவுண்டரிகளை மட்டுமே அடித்தது.

இரண்டாம் பாதியில் பிட்ச் கொஞ்சம் சற்றே பந்துகள் வேகமாக வரத் தொடங்கியபோது மும்பை இந்தியன்ஸ் அணியின் மெக்லினாகன் முரளி விஜய்க்கு ஏகப்பட்ட தளர்வான பந்துகளை வீசினார், அதே போல் டிம் சவுத்தி நிறைய ஓவர் பிட்ச்களை வீச அதனை விருத்திமான் சஹா அருமையான ஸ்கோரிங் வாய்ப்புகளாக மாற்றினார்.

மும்பை இந்தியன்ஸ் பவர் பிளே முடிவில் 21/2 என்று இருந்தது. இந்த சீசனில் முதல் 6 ஓவர்களில் எடுக்கப்பட்ட ஆகக்குறைந்த ரன்களாகும் இது.

மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் அசத்தினார். அவர் பந்துகள் நன்றாகத் திரும்பி எழுந்தன. ஆனால் அவருக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. குருணால் பாண்டியாவை விஜய்யும், சஹாவும் வெகுசுலபமாக ஆடினர்.

விஜய் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, சஹா 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து மெக்லினாகனிடம் பவுல்டு ஆனார். ஹஷிம் ஆம்லா, கிளென் மேக்ஸ்வெல் இருவரும் ஸ்கோரரை தொந்தரவு செய்யாமல் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

முன்னதாக மும்பை அணியில் கெய்ரன் பொலார்ட் மட்டுமே அதிகபட்சமாக 3 சிக்சர்களுடன் 27 ரன்களை எடுத்தார். ரோஹித் சர்மா 15, உன்முக்த் சந்த், ராயுடு ஆகியோர் டக் அவுட் ஆக, ரானா 25 ரன்களை எடுத்தார். 14-வது ஓவருக்கும் 17-வது ஓவருக்கும் இடையே 42 ரன்கள் சேர்க்கப்பட்டதால் மும்பை 124 ரன்களையாவது எட்டியது. கிங்ஸ் லெவன் அணி இந்த வெற்றியுடன் 11-ல் 4-ஐ வென்று 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ள தோனியின் புனே அணியை விட 2 புள்ளிகள் அதிகம் பெற்று அதற்கு முந்தைய இடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x