Published : 10 May 2016 02:36 PM
Last Updated : 10 May 2016 02:36 PM

சுயநலத்துக்காக ஆடும் வீரர்கள் தேவையில்லை: பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கண்டிப்பு

வக்கார் யூனிஸுக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவின் மிக்கி ஆர்தர் தான் மிகவும் கண்டிப்பான பயிற்சியாளர் என்று எச்சரித்துள்ளார்.

ஏற்கெனவே தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இவர் பயிற்சிக்காலங்களில் ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவிடம் ஆஸ்திரேலியா 4-0 என்று டெஸ்ட் உதை வாங்கிய தொடரில் துணை கேப்டன் வாட்சனை அணியிலிருந்து நீக்கினார். ஜேம்ஸ் பேட்டின்சன், மிட்செல் ஜான்சன், உஸ்மான் கவாஜா ஆகியோரையும் நீக்கி சர்ச்சைக்குள் சிக்கினார். கேப்டன் மைக்கேல் கிளார்க் இவருக்கு சாதகமாக வெளியில் அறிக்கைகள் கொடுத்தாலும் உள்ளுக்குள் இருவருக்குமிடையே மோதல் போக்குகள் இருந்து வந்த்து.

இந்நிலையில் இவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

இதனையடுத்து அவர் தன் பணிகள் குறித்து கூறும்போது, “நான் ஒழுக்கத்தில் மிகவும் கண்டிப்பானவன். அப்படி இருந்தால்தான் முடிவுகள் அணிக்குச் சாதகமாக அமையும். அனைவரும் அணிக்காக ஆடுவதையே நான் வலியுறுத்துவேன், சுயநலத்துக்காக ஆடும் வீரர்கள் எனக்கு தேவையில்லை.

பவுலிங் நன்றாக உள்ளது, ஆனால் பேட்டிங்கில் கடுமையான முன்னேற்றம் தேவை. பீல்டிங், உடல்தகுதி ஆகியவற்றில் கண்டிப்பாக நடந்து கொள்வேன். இந்த விவகாரத்தில் சமரசத்துக்கு இடமில்லை. சரியாக ஆடாத வீரர்கள், நன்றாகத் தங்களை தயார்படுத்திக் கொள்ளாத வீரர்கள் வசைக்கும் ஏசலுக்கும் தயாராக இருப்பது நல்லது.

வரும் ஜூலை, செப்டம்பரில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அயர்லாந்தில் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 ஆகியவற்றில் விளையாடுகிறது, இது பாகிஸ்தானுக்கு சவாலான தொடர்.

பாகிஸ்தான் வீரர்களுக்கு சோதனை அளிக்கும். ஆனால் வீரர்கள் சவால்களுக்குத் தயாராக வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். சந்தேகமின்றி வெற்றி பெறவே அங்கு செல்கிறோம். வீரர்களிடத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால் நான் என்னுடைய வேலையச் சரியாகச் செய்கிறேன் என்று அர்த்தம்” என்றார்.

மிகவும் சர்ச்சைக்குரிய கண்டிப்பான பயிற்சியாளர் இவர். இவருடன் பாகிஸ்தான் வீரர்கள் ஒத்துப்போவார்களா? என்ன நிகழும் என்பது போகப்போகத் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x