Published : 16 Jul 2022 07:29 AM
Last Updated : 16 Jul 2022 07:29 AM

இந்திய அணியில் கோலி இடத்துக்கு பிரச்சினையா? - கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 246 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 38.5 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 29, ரவீந்திர ஜடேஜா 29, சூர்யகுமார் யாதவ் 27, மொகமது ஷமி 23, விராட் கோலி 16 ரன்கள் சேர்த்தனர்.

ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் ரன் ஏதும் எடுக்காமலும் ஷிகர் தவண் 9 ரன்களிலும் நடையை கட்டினர். இங்கிலாந்து அணி சார்பில் ரீஸ் டாப்லே 9.5 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் 6 விக்கெட்களை வேட்டையாடினார்.

விராட் கோலியின் மோசமான பார்ம் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. கடந்த 3 ஆண்டுகளாகவே விராட் கோலி ரன்கள் குவிக்க மிகுந்த சிரமப்பட்டு வருகிறார். இதனால் விராட் கோலி மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 2-வது போட்டி முடிவடைந்ததும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “விராட் கோலி ஏராளமான போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர், சிறந்த பேட்ஸ்மேன். அணியில் அவரது இடம் குறித்து மறு உறுதியளிக்க தேவையில்லை. நான் முன்பு கூறியது போல், பார்ம் என்பது ஏற்ற, இறக்கங்கள் கொண்டது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையிலும் இது ஒரு பகுதியாகும். சிறந்த கிரிக்கெட் வீரர் கூட ஏற்ற, தாழ்வுகளில் பங்களிப்பார்.

இந்திய அணிக்காக பல்வேறுபோட்டிகளில் வெற்றி தேடிக்கொடுத்த ஒருவருக்கு, மீண்டும் எழுந்து வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு இன்னிங்ஸ்கள் தேவை. அதைத் தான் நான் உணர்கிறேன். கிரிக்கெட்டை பின்தொடர்பவர்களும் அதேபோன்றே நினைப்பார்கள் என கருதுகிறேன்.

விராட் கோலியின் பார்ம் குறித்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்று எனக்குத் தெரியும், ஆனால் நாங்கள்பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம், வீரர்கள் ஏற்ற தாழ்வுகளைக் கடந்து செல்கிறோம், ஆனால் தரம் ஒருபோதும் மறைந்துவிடாது, அதை நாம் மனதில் கொள்ள வேண்டும். விராட் கோலியின் கடந்தகால சாதனைகள், அவர் அடித்த சதங்களின் எண்ணிக்கை, சராசரியைப் பாருங்கள். அவர், அனுபவம் வாய்ந்த வீரர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x