Published : 25 Apr 2014 09:42 PM Last Updated : 25 Apr 2014 09:42 PM
ஐபிஎல்: மும்பையை வீழ்த்தி சென்னை ஹாட்ரிக் வெற்றி
துபாயில் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதல் போட்டியில் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்ததை அடுத்து, தொடர்ந்து மூன்றாவது வெற்றியை இந்தத் தொடரில் சென்னை அணி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெற்றி இலக்கான 142 ரன்களை விரட்ட களமிறங்கிய ஸ்மித் மற்றும் மெக்கல்லம் வழக்கம் போல அதிரடியான ஆட்டத்தை ஆரம்பித்தனர். 6-வது பவர்ப்ளே ஓவர் முடியும் போது சென்னை அணி 50 ரன்களை விக்கெட் இழப்பின்றி கடந்திருந்தது. அடுத்த ஓவரிலேயே ஸ்மித் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதற்கடுத்த ஓவரில் ரெய்னா ஹர்பஜனின் சுழலில் 1 ரன்னிற்கு வீழ்ந்தார்.
இதைத் தொடர்ந்து இணைந்த ப்ளெஸிஸ் மெக்கல்லம் ஜோடி திடீர் சரிவிலிருந்து அணியை மீட்டது. 32 பந்துகள் இணைந்து ஆடிய இந்த இணை 57 ரன்களைக் குவித்தது. 4 ஓவரில் 28 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ப்ளெஸிஸ் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனி, மெக்கல்லமுடன் இணைந்து தன் பங்கிற்கு 1 சிக்ஸரயும், 1 பவுண்டரியும் விளாசினார்.
19-வது ஓவரிலேயே சென்னை அணி வெற்றி இலக்கைத் தொட்டது. மெக்கல்லம் 53 பந்துகளில் 71 ரன்களும், தோனி 11 பந்துகளில் 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிறப்பாக பந்துவீசிய மோஹித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. சக ஆஸ்திரேலிய வீரர் ஹில்ஃபெனாஸ் பந்தில் 1 ரன்னிற்கு மைக் ஹஸ்ஸி வீழ்ந்தார்.
சிறப்பாக ஆடிவந்த மற்றொரு துவக்க வீரர் தாரே 23 ரன்களுக்கு (19 பந்துகள்) ஆட்டமிழந்தார். ஆட்டத்தைத் தொடர்ந்த ரோஹித் சர்மா, கோரே ஆண்டர்சன் ஜோடி பொறுப்புடன் சூழலை உணர்ந்து ஆடினர். இதனால் மும்பை அணி 15 ஓவர்களில் 108 ரன்களை எடுத்தது.
16-வது ஓவரில் 39 ரன்களுக்கு ஆண்டர்சன் ரன்-அவுட் ஆகி வெளியேறினார். ரோஹித் சர்மாவும் அரைசதம் அடித்த கையோடு வெளியேறினார். தொடர்ந்து வந்த மும்பை வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.
கடைசி ஓவரில் கவுதம் ஒரு பவுண்டரியும், ஜாகீர் கான் ஒரு சிக்ஸரும் அடித்ததால் மும்பை அணி 140 ரன்களைக் கடந்தது. இறுதியில், மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களுக்கு தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது. சென்னை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மோஹித் சர்மா 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
100-வது போட்டி
இன்றைய போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் 100-வது ஐபிஎல் போட்டியாகும். போட்டியில் ரோஹித் சர்மா அரை சதம் அடித்தாலும் வெற்றி தோனியின் பக்கமே இருந்தது.
WRITE A COMMENT