Published : 10 May 2016 03:43 PM
Last Updated : 10 May 2016 03:43 PM
மொஹாலியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபாரமாக இலக்கைத் துரத்தியும் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வி தழுவியது.
முதலில் பேட் செய்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் முரளி விஜய் 57 பந்துகளில் 12 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 89 ரன்கள் என்று அபாரமான இன்னிங்சை ஆடியும் 174 ரன்கள் எடுத்து கிங்ஸ் லெவன் தோல்வி தழுவியது. கிங்ஸ் லெவன் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முரளி விஜய்யின் இந்த இன்னிங்ஸ் மற்றும் பெங்களூரு வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
2 புள்ளிகள் கிடைத்தது. முதல் போட்டியில் 50 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற போது ஏற்பட்ட உணர்வுக்கு சமமான இனிய உணர்வைக் கொடுக்கிறது இந்த வெற்றி. முடிவில் உண்மையில் பதற்றம் அதிகரித்தது.
நான் முரளி விஜய்யை பாராட்டவே செய்வேன். பேட்டிங் சுலபமில்லாத பிட்சில் முரளி விஜய் ஆடிய விதம் அபாரம். நிறைய 2 ரன்களை ஓடினார். நான் நின்று ஆட முயற்சி செய்தேன். 2 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் இழந்தது கிரிமினலாகும் (ராகுல், கோலி இருவரும் 8-வது ஓவரில் ஆட்டமிழந்தனர்). அந்தத் தருணத்தில் உலகத்தரம் வாய்ந்த வீரர் ஒருவர் தேவை, அந்தப் பணியை டிவில்லியர்ஸ் அபாரமாக நிறைவேற்றினார் (35 பந்துகளில் 64 ரன்கள்) அவர் ஆடிய சில ஷாட்களை வேறு ஒருவரும் அவ்வளவு எளிதில் ஆடி விட முடியாது.
இந்த வடிவத்தில் ஒவ்வொரு பந்துமே முக்கியத்துவம்தான். முந்தைய பந்தில் என்ன தவறு செய்தோம் என்பதை யோசிக்க இது வடிவமல்ல. கிறிஸ் ஜோர்டானையும் பாராட்டுகிறேன், கடைசி 2 பந்துகளில் அவர் தனது பொறுமையைக் காத்து எங்களுக்கு 1 ரன் வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.
இவ்வாறு கூறினார் கோலி.
முரளி விஜய் கூறியது: கடைசி ஒவர் வரை வெற்றி பெறும் நிலையில் இருந்தோம். வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இது ஒரு நல்ல கிரிக்கெட் போட்டியாக அமைந்தது. டிவில்லியர்ஸ் இன்னிங்ஸுக்குப் பிறகே பெங்களூருவை 170 சொச்ச ரன்களுக்கு மட்டுப்படுத்தினோம்.
நான் களவியூகத்தை பெரிதாக மாற்ற விரும்பவில்லை, எப்படியிருந்தாலும் அவர் கள்வியூகத்துடன் விளையாடவே செய்வார். எனவே திட்டமிட்டபடி வீசுமாறு கூறினேன். கடைசி வரை நிற்குமாறு ஸ்டாய்னிஸுக்கு அறிவுறுத்தினேன்.
பிட்சில் பவுன்ஸ் இல்லை, எனவே முறையான கிரிக்கெட் ஷாட்களை ஆடி கடைசி வரை நின்றால் எதுவும் நடக்கும் என்று கூறினேன். இந்தப் போட்டி எங்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக அமைந்ததில் மகிழ்ச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT