Published : 08 Jul 2022 02:16 AM
Last Updated : 08 Jul 2022 02:16 AM
சவுத்தாம்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது இந்திய அணி.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் சவுத்தாம்டனில் இன்று தொடங்கியது. கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்றைய ஆட்டத்தில் அணியை வழிநடத்தினார். விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் 2-வது போட்டியையொட்டியே அணியுடன் இணைய உள்ள நிலையில் அயர்லாந்து தொடரில் விளையாடிய வீரர்களுடன் களமிறங்கினார் ரோஹித். டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அயர்லாந்து தொடரில் ஓப்பனிங் களமிறங்கிய இஷான் கிஷனுடன் வந்த ரோஹித் சர்மா ஆரம்பமே அதிரடி மோடில் தொடங்கினார். அடுத்தடுத்து ஐந்து பவுண்டரிகள் விளாசியவர் வந்த வேகத்தில் நடையைக்கட்டினார். அவர் 24 ரன்கள் சேர்த்திருந்தார். இஷான் கிஷன் சோபிக்க தவறினாலும், அயர்லாந்து தொடரில் சதம் விளாசி பார்மின் உச்சத்தில் இருக்கும் தீபக் ஹூடா, இந்தப் போட்டியிலும் அதே பார்மை தொடர்ந்தார்.
அவருடன் சூர்யகுமார் யாதவ் இணைந்துகொள்ள இந்திய அணியின் ஸ்கோர் 10 ரன் ரேட்டுக்கு குறையவில்லை. இருவரின் அதிரடியையும் கிறிஸ் ஜோர்டான் வந்து தடுத்தார். ஹூடா 33 ரன்களுக்கும், சூர்யகுமார் 39 ரன்களுக்கும் அவுட் ஆகினர். இதன்பின் வந்தவர்கள் வருவதும் போவதுமாக இருந்தாலும், ஹர்திக் பாண்டியா அணியை மீட்டெடுத்தார். முதல் அரைசதத்தை அவரின் அரைசதம் உதவியுடன் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் எட்டு விக்கெட்களை இழந்து 198 ரன்களை எடுத்தது.
பெரிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரே ஷாக் கொடுத்தார் இந்திய பவுலர் புவனேஷ்வர் குமார். அவரின் முதல் ஓவரில் ஒரு ரன்களைகூட விட்டுக்கொடுக்காமல் பவுலிங்கில் விரட்டிய புவனேஷ்வர் ஐந்தாவது பந்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரை கிளீன் போல்டக்கினார். மற்றொரு ஓப்பன் ஜேசன் ராய் அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர், சஹால் என இந்திய அணியின் மிரட்டல் பவுலிங்கால் திணற, இங்கிலாந்து ரன்கள் சேகரிப்பதில் தேக்கமடைந்தது.
குறிப்பாக ஹர்திக் பாண்டியா பவுலிங்கிலும் மிரளவைத்தார். தான் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்களை வீழ்த்தியவர், மொத்தமாக நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்ஷல் படேல் உள்ளிட்டோரும் சீரான இடைவெளியில் இங்கிலாந்து வீரர்களை ஒவ்வொருவராக வெளியேற்ற 19.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்திய தரப்பில் ஹர்திக் பாண்டியா நான்கு விக்கெட்களும், அர்ஷதீப் சிங் மற்றும் சஹால் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT