Published : 05 Jul 2022 08:08 PM
Last Updated : 05 Jul 2022 08:08 PM
எட்ஜ்பாஸ்டன்: கேப்டன் பொறுப்பு தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக இந்திய வீரர் பும்ரா தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு இதனை அவர் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வகையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்தத் தொடரில் 4 போட்டிகள் மட்டுமே நடந்த நிலையில் கடைசி போட்டி கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்போது அந்தப் போட்டி தான் எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி கடைசி போட்டி எஞ்சி இருந்த நிலையில் 2-1 என தொடரில் முன்னிலை வகித்தது. எட்ஜ்பாஸ்டனில் இந்தியா வீழ்ச்சியை தழுவியதன் மூலம் இந்த தொடர் சமனில் முடிந்துள்ளது. | வாசிக்க > இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன?
இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக பும்ரா செயல்பட்டார். அவருக்கு கேப்டனாக இதுதான் முதல் போட்டி. அணியின் பிரதான கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தால் அவர் இந்தப் போட்டியில் விளையாடவில்லை.
இத்தகைய சூழலில் இப்போது இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. இந்தப் போட்டியின் முதல் மூன்று நாட்கள் முழுவதும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் கடைசி இரண்டு நாட்கள் இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்தது.
"இந்த போட்டியில் எங்களுக்கு முதல் மூன்று நாட்கள் சாதகமாக அமைந்தது. இருந்தாலும் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகு. எங்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான பேட்டிங் அமையவில்லை. அந்த இடத்தில்தான் ஆட்டம் எங்கள் கையிலிருந்து நழுவி எதிரணியினர் வசமானது.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் மழை பொழிவு இல்லாமல் இருந்திருந்தால் அதன் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கும். ஆனால் இங்கிலாந்து அணியினர் அற்புதமாக விளையாடி இருந்தனர். இரு அணியும் அற்புதமான கிரிக்கெட்டை இந்த தொடரில் வெளிப்படுத்தி உள்ளது.
பந்த் மற்றும் ஜடேஜா எங்களுக்கு இந்தப் போட்டியில் கவுன்ட்டர்-அட்டாக் செய்து கம்பேக் கொடுத்தனர். நாங்கள் கொஞ்சம் ஸ்ட்ரைட் லைனில் பந்து வீசி இருக்க வேண்டும். பவுன்சர்களை பயன்படுத்தி இருக்க வேண்டும்.
சவால்களை எதிர்கொள்ள விரும்புபவன் நான். அந்த வகையில் கேப்டன் பொறுப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஆனால் அதன் எதிர்காலம் குறித்து முடிவு செய்வது நான் இல்லை. இந்த புதிய சவால் மிகவும் அருமையானதாக உள்ளது. அணியை வழிநடத்த கிடைத்த வாய்ப்பை நான் கவுரவமாக பார்க்கிறேன். இது ஒரு சிறந்த அனுபவம்" என பும்ரா தெரிவித்துள்ளார்.
"This is the beauty of Test cricket."
Player of the Series Jasprit Bumrah discusses where he thinks it slipped away... pic.twitter.com/2GOlCJkpNh— Sky Sports Cricket (@SkyCricket) July 5, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT