Published : 05 Jul 2022 05:49 AM
Last Updated : 05 Jul 2022 05:49 AM
பர்மிங்காம்: கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இதில் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 259 ரன்கள் குவிக்க வெற்றிக்கு இன்னும் 119 ரன்களே தேவைப்படுகிறது.
பர்மிங்காமில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்களும், இங்கிலாந்து 284 ரன்களும் எடுத்தன. 132 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடி இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 45 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது.
சேதேஷ்வர் புஜாரா 50, ரிஷப் பந்த் 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி விரைவாக விக்கெட்களை பறிகொடுத்தது. புஜாரா 66 ரன்னில் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் ஐயர் 19 ரன்னில் மேத்யூ பாட்ஸ் பந்திலும், ரிஷப் பந்த் 57 ரன்னில் ஜேக் லீச் பந்திலும் வெளியேறினர்.
ஷர்துல் தாக்குர் 4, மொகமது ஷமி 13, ரவீந்திர ஜடேஜா 23, ஜஸ்பிரீத் பும்ரா 7 ரன்களில் நடையை கட்ட 81.5 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி. இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4, ஸ்டூவர்ட் பிராடு 2, மேத்யூ பாட்ஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
378 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி தேனீர் இடைவேளையில் 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. ஸாக் கிராவ்லி 46 ரன்களில் பும்ரா பந்தில் போல்டானார். அலெக்ஸ் லீஸ் 56 ரன்களுடனும், ஆலி போப் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
தேனீர் இடைவேளைக்கு பின்பு இந்தியா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினாலும் ஆட்டம் மெல்ல இங்கிலாந்து வசம் சென்றது. அதற்கு காரணம், ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜோ ரூட் இருவரும் தான். இருவரும் இந்திய பௌலர்களை எளிதாக சமாளித்தனர். 150 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த இவர்கள் கூட்டணியை பிரிக்க, இந்திய பௌலர்கள் பல யுக்தியை கையாண்டும் முடியவில்லை. இதனால் ஒருகட்டத்தில் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இருவரும் அடுத்தடுத்து அரைசதமும் கடந்தனர். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 259 ரன்கள் குவிக்க வெற்றிக்கு இன்னும் 119 ரன்களே தேவைப்படுகிறது. கைவசம் ஏழு விக்கெட்களை கொண்டுள்ள அந்த அணியில் ஜோ ரூட் 76 ரன்களுடனும், ஜானி பேர்ஸ்டோ 72 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT