Published : 04 Jul 2022 07:50 PM
Last Updated : 04 Jul 2022 07:50 PM
எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களைக் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பந்த். இதன் மூலம் தோனியை அவர் முந்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் தற்போது எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், முதல் இன்னிங்ஸில் 146 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்கள் விளாசி இருந்தார். இரண்டையும் சேர்த்து 203 ரன்களை இந்தப் போட்டியில் அவர் ஸ்கோர் செய்திருந்தார்.
இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை குவித்த இந்திய கிரிக்கெட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பந்த்.
இதற்கு முன்னதாக இந்தச் சாதனை, முன்னாள் இந்திய கேப்டன் தோனி வசம் இருந்தது. கடந்த 2011-இல் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவர் 151 ரன்கள் எடுத்திருந்தார். தோனியும் இதே எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில்தான் அந்த ரன்களை எடுத்திருந்தார். முதல் இன்னிங்ஸில் 77 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 74 ரன்கள் எடுத்திருந்தார் அவர். இப்போது அதே மைதானத்தில் தான் ரிஷப் பந்த், தோனியின் சாதனையை முந்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT